மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

புதிய தொடர்: நமக்குள் தேடுவோம்!

புதிய தொடர்: நமக்குள் தேடுவோம்!

நமது செயல்களைத் தீர்மானிக்கும் காரணி எது? – ஆசிஃபா

எந்த ஒரு சூழலாக இருந்தாலும் நம் ஒவ்வொருவருடைய எதிர்வினையும் ஒரே மாதிரி இருக்காது. சாலையில் ஒரு விபத்து நடக்கிறது என்றால், சிலர் அவசர உதவி கொடுப்பார்கள்; சிலர் பயத்தில் கடந்துவிடுவார்கள்; சிலர் பிரார்த்தனை செய்வார்கள்; சிலர் “பாத்து போகக் கூடாதா?” என்று கேட்பார்கள்; இன்னும் சிலர் தன் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்.

இந்த எதிர்வினைகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு மனப்பான்மை அல்லது அணுகுமுறை (attitude) இருக்கிறது.

எதிர்வினைகளுக்கு மட்டுமல்ல. இயல்பான வினைகளுக்கும் இது பொருந்தும். அதாவது, விபத்து முதலான ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றுவதில் மட்டுமல்ல. நமது அன்றாட வினைகளுக்குப் பின்னாலும் சில அணுகுமுறைகள் உள்ளன.

நமது வேலை, ஓய்வு, பொழுதுபோக்கு, பழக்கவழக்கங்கள், உணவு, உறவுகள், உறக்கம் எனப் பல வினைகளுக்குப் பின்னாலும் குறிப்பிட்ட சில விதமான மனப்பான்மைகள் அல்லது அணுகுமுறைகள் இருக்கின்றது.

Attitude என்ற ஆங்கிலச் சொல் தற்போது பொதுவாக எதிர்மறையான பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பிறரது கவனத்தைக் கவரும் நோக்கில் வெளிப்படுத்தப்படும் அதீத தன்னம்பிக்கை, அலட்சியம் என்பன போன்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பொருள் இச்சொல்லுக்கு உண்டு என்றாலும், மனப்பான்மை, அணுகுமுறை என்னும் பொருளும் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட சூழலில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பதை நம்முடைய மனப்பான்மையும் அணுகுமுறையுமே தீர்மானிக்கின்றன. Attitudeதான் நம்முடைய நடத்தையை வரையறுக்கும் காரணி என்றுகூடச் சொல்லலாம்.

அப்படியென்றால், நம்முடைய ஒவ்வொரு அணுகுமுறைக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கும் இல்லையா? ஒரு விஷயத்தின் மீது ஆழமான நம்பிக்கையோ வெறுப்போ பயமோ உருவாவதற்கும், அதை நம் மனம் புரிந்துகொள்ளும் விதத்திற்கும் பின்னால் ஒரு காரணம், ஒரு கதை இருக்கும். அதைப் புரிந்துகொண்டால், அணுகுமுறைகளைப் புரிந்துகொள்ளலாம். மாற்ற வேண்டிய அணுகுமுறைகளை எப்படி மாற்றலாம் என்பதும் நமக்குத் தெரிந்துவிடும்.

பிரச்சினைக்குரிய அம்சங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவற்றை மாற்ற முடியாது. சொல்லப்போனால், சரியான விதத்தில் புரிந்துகொள்ளும்போதே சிக்கல் பாதி தீர்ந்ததுபோலத்தான். காரணம், அந்தப் புரிதலிலேயே மாற்றத்துக்கான விதையும் இருக்கிறது.

அணுகுமுறைகளில் நேர்மறையானவையும் உள்ளன, எதிர்மறையானவையும் உள்ளன. குறிப்பிட்ட ஒரு சூழலில் நம்முடைய எதிர்வினைகளைக் கவனிப்பதன் மூலம், நம்முடைய மனப்பான்மையை நாமே கண்டுபிடித்துவிடலாம். இதற்கு நம்மையே நாம் சற்று கவனிக்க வேண்டும். அவ்வளவுதான்.

நம்முடைய மனப்பான்மைகள் அனைத்தும் உருவாவதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

1. குறிப்பிட்ட பொருள்/சூழலைப் பற்றிய நம்முடைய எண்ணங்களும் நம்பிக்கைகளும்.

2. ஒரு பொருள், சூழல், நபர் நம்மை உணரவைக்கும் விதம் அல்லது நம்மிடம் என்ன மாதிரியான ஏற்படுத்தும் தாக்கம்.

3. அந்தக் குறிப்பிட்ட அணுகுமுறை நம்முடைய நடத்தையைப் பாதிக்கும் விதம்.

இந்த அணுகுமுறைகளை கவனிப்பதன் மூலம், அவை நம்மிடமும் நம்மைச் சுற்றியும் ஏற்படுத்தும் பாதிப்புகளை மாற்றியமைக்கலாம். குறிப்பிட்ட ஒரு அணுகுமுறை உருவாவதற்கு, நம்முடைய அனுபவம், சமூகக் காரணிகள், நாம் கற்றவை, தொலைக்காட்சி முதலான ஊடகங்கள் மூலமாகத் தெரிந்துகொண்டவை ஆகியவை முக்கியமான காரணிகளாக உள்ளன.

சிறு வயதில் நம்முடைய நினைவிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் முதல், இன்று இந்த நொடிவரை நடக்கும் அனைத்தும், நாம் காணும் அனைவரும் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் இவை நமக்குத் தெரிந்து நடக்கும், பல நேரங்களில் நம்மையே அறியாமல் இந்த மாற்றங்கள் நிகழும்.

நம்மை நாம் தெரிந்துகொள்வதுதான், எவ்வளவு சிக்கலான சூழலிலிருந்தும் நம்மை மீண்டெழச் செய்யும், ஃபீனிக்ஸ் பறவை போல!

நம்மை நாமே அறியும் பயணத்தைத் தொடங்குவோம். அதற்கு முதல் படியாக நமது அணுகுமுறைகளை நாம் அறிவோம்.

தொடர்ந்து தேடுவோம்…

(தொடரின் அடுத்த பகுதி வியாழனன்று வெளியாகும்)

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon