மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

ராஜேந்திர பாலாஜியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: மநீம!

ராஜேந்திர பாலாஜியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: மநீம!

கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய விவகாரத்தில் அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று முன்தினம் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பின. இந்து அமைப்புகளும், பாஜக, அதிமுக உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி உள்ளிட்டோர் கமலின் கருத்தை ஆதரித்து பேசியிருந்தனர், கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.அதுபோன்று இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே மதகலவரத்தை தூண்டும் வகையில் கமல் பேசி உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்து இது போன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கமல் கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் மற்றும் கமல் வீட்டிற்கு இன்று (மே 14) போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை ஆய்வாளர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்து அமைப்புகள் கமலுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கமல் நேற்று மேற்கொள்ளவிருந்த அரவக்குறிச்சி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று ஓட்டப்பிடாரம் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் நாளை திட்டமிட்டபடி திருப்பரங்குன்றத்தில் கமல் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே கமல் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்திருந்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கையில், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்டவிரோதமாக ‘மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி, தன் பதவிப் பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்துகொண்டதற்காக அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கமலின் கருத்துக்கு அவரது நண்பரும், நடிகருமான ரஜினி காந்த் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon