மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை: ஸ்டாலின்

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை: ஸ்டாலின்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மூன்றாவது அணி உருவாக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசியிருந்தார். ஸ்டாலினிடம் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி தொடர்பாக பேசியதாகவும், ஆனால் ஸ்டாலின் அவரை காங்கிரஸ் அணிக்கு அழைத்ததாகவும் தகவல் வெளியானது. சந்திப்பு தொடர்பாக சந்திரசேகர ராவ் தரப்பிலிருந்தோ திமுக தரப்பிலிருந்தோ யாரும் செய்தியாளர்களை சந்திக்காத நிலையில், அது பல்வேறு யூகங்களை கிளப்பியிருந்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று ஸ்டாலின் அனுப்பிய பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (மே 14) இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “அணிகளை உருவாக்குவதற்காக சந்திரசேகர ராவ் வரவில்லை. தமிழகத்தில் பல ஆலயங்களில் வழிபாடு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னையும் சந்திக்க அவர் நேரம் கேட்டார். நேரம் கொடுத்தபின் என்னை வந்து சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்” என்று விளக்கினார்.

மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “அதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் 23ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகுதான் அதனை முடிவு செய்ய முடியும்” என்று பதிலளித்தார்.மேலும், “இந்த சந்திப்பு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தமிழிசை கூறியிருக்கிறார். அவர் கூறிய தாக்கத்திலிருந்து ‘க்’ ஐ எடுத்துவிடுங்கள். இந்த சந்திப்பு என்பது தமிழிசைக்கு தாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்றும் தெரிவித்தார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon