மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

பாஜகவை ஆர்எஸ்எஸ் கைவிட்டுவிட்டது: மாயாவதி!

பாஜகவை ஆர்எஸ்எஸ் கைவிட்டுவிட்டது: மாயாவதி!

பாஜக அரசு ஒரு மூழ்கும் கப்பல் எனவும், பாஜகவின் சித்தாந்த தலைமையான ஆர்எஸ்எஸ் அமைப்பே அக்கட்சியை கைவிட்டுவிட்டதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடியின் அரசு மூழ்கிவரும் கப்பல். அதற்கு அத்தாட்சியாக ஆர்எஸ்எஸ் அமைப்பே மோடி அரசைக் கைவிட்டுவிட்டது. தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றாத காரணத்தால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆகையால் பாஜகவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எங்கும் பிரச்சாரம் செய்வதில்லை. இதனால் பிரதமர் மோடியே பதற்றத்தில் உள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தின் நலனைக் கருத்தில் கொண்டு நாட்டை ஆட்சி செய்யகூடிய தூய்மையான பிரதமர்தான் நமக்கு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரச்சாரத் தடை விதிக்கப்பட்டுள்ளபோதும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோயில்களுக்குச் செல்வதை உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். “தேர்தல் நேரத்தில் நடைபயணங்களும் கோயிலில் வழிபடுதலும் ஃபேஷனாக மாறிவிட்டன.

இதற்காக நிறைய பணம் செலவிடப்படுகிறது. இந்தச் செலவையெல்லாம் வேட்பாளரின் ஒட்டுமொத்தச் செலவில் தேர்தல் ஆணையம் இணைக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. ஆனாலும் அவர்கள் பொது இடங்களுக்குப் போவதும், கோயில்களில் வழிபடுவதும் ஊடகங்களில் காட்டப்படுகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும். இது குறித்துத் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon