மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

விபத்துக்குக் காரணம் சாலை பராமரிப்பின்மை!

விபத்துக்குக் காரணம் சாலை பராமரிப்பின்மை!

முறையாகச் சாலைகளைப் பராமரிக்காததே விபத்துகள் அதிகரிக்கக் காரணம் என்று தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி – புஷ்பா தம்பதியர். இவர்களது மகன் நவீன்ராஜ். 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று, புஷ்பா உட்பட மூன்று பேரும் தேனி – வீரபாண்டி சாலையில் நடந்து சென்றனர். அப்போது, புஷ்பா 6 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். செல்லும் வழியில் எதிரே வந்த மினிவேன் மோதியதில் புஷ்பா உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக, தேனி மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார் கருப்பசாமி. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 2012ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 360 ரூபாய் புஷ்பா குடும்பத்துக்கு வழங்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தது.

நேற்று (மே 13) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சாலைகளை முறையாகப் பராமரிக்காததே விபத்துகள் நிகழக் காரணம் என்று தெரிவித்தார். “1988ல் ஏற்படுத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்போது வரை திருத்தம் கொண்டுவரவில்லை. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கும் பிரிவுகள் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இழப்பீடு வழங்கும் பிரிவுகள் தற்போதைய பண மதிப்பு உள்ளிட்டவைகளுக்கு ஏற்றதாக இல்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததும், விதிகளைப் பின்பற்றாததாலும் விபத்துகள் அதிகரிக்கின்றன” என்று கூறினார் நீதிபதி.

விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி புஷ்பாவின் குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்துவதாகவும், இதனை 7.5 சதவிகித வட்டியுடன் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் எனவும், தன் உத்தரவில் குறிபிட்டார். கணவர் மற்றும் மகன் முன்னே புஷ்பா பலியானார் என்றும், அப்போது அவர் 6 மாத சிசுவை வயிற்றில் சுமந்ததைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், நீதிபதி கிருபாகரன் தன் உத்தரவில் குறிப்பிட்டார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon