மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஐந்தில் ஒரு வேட்பாளர் மீது குற்ற வழக்கு!

ஐந்தில் ஒரு வேட்பாளர் மீது குற்ற வழக்கு!

2019 மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுள்ள ஒட்டுமொத்த வேட்பாளர்களில் ஐந்தில் ஒருவர் மீது குற்ற வழக்கு உள்ளது.

நாட்டின் 17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் மே 19ஆம் தேதி நிறைவடைகிறது. 23ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்தத் தேர்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பும், இறுதி வேட்பாளர் பட்டியலின் விவரங்களைக் கொண்டு வேட்பாளர்களின் சொத்து, கல்வி மற்றும் குற்ற வழக்குப் பின்னணி தொடர்பான விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வின்படி, 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இது 2014ஆம் ஆண்டு தேர்தலில் 17 விழுக்காடாகவும், 2009ஆம் ஆண்டு தேர்தலில் 15 விழுக்காடாகவும் இருந்தது.

இவர்களில் பலர் மீது பாலியல் வன்முறைகள், கொலைகள் மற்றும் ஆள்கடத்தல் போன்ற முக்கியக் குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் நிறுவன உறுப்பினர் ஜெக்தீப் சோகர் நேற்று (மே 13) செய்தியாளர்களிடம் பேசுகையில், ”குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் உயர்ந்து வருகிறது. ஏன் குற்றப் பின்னணி உடையவர்கள் அதிகம் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்கள் என வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது” என்றார்.

ஆளும் கட்சியான பாஜக வேட்பாளர்களில் 40 விழுக்காட்டினர் மீதும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களில் 39 விழுக்காட்டினர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதேபோல ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 48 விழுக்காட்டினர் பட்டதாரிகள். 60 விழுக்காட்டினர் 50 வயதுக்கும் குறைவானவர்கள். 9 விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள்.

ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 29 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள். இது 2014ஆம் ஆண்டில் 27 விழுக்காடாக மட்டுமே இருந்தது. இதுவரையில் ரூ.3,400 கோடி மதிப்பிலான நகை, பணம், மது வகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon