மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

மம்தா பானர்ஜி மீம்: மன்னிப்பு கேட்க உத்தரவு!

மம்தா பானர்ஜி மீம்: மன்னிப்பு கேட்க உத்தரவு!

மம்தா பானர்ஜி குறித்து அவதூறு மீம் வெளியிட்ட பாஜக பணியாளர் பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த பணியாளர் பிரியங்கா சர்மா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை நடிகை பிரியங்கா சோப்ராவின் உடலில் பொருத்தி போட்டோஷாப் செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக திருணமூல் காங்கிரஸ் பணியாளர் விபாஸ் ஹஜ்ரா காவல்துறையில் புகாரளித்தார்.

இதைத்தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500இன் (அவதூறு) கீழ் பிரியங்கா சர்மா மீது மேற்கு வங்க காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மே 10ஆம் தேதியன்று அவரை கைது செய்தனர். பிரியங்கா சர்மாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மே11ஆம் தேதியன்று ஹவுரா நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிறகு மே 14 வரை உள்ளூர் நீதிமன்றங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றதால் பிரியங்கா சர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிரியங்கா சர்மா அவரது அவதூறு மீமிற்காக மம்தா பானர்ஜியிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று உத்தரவிட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினர்.

மேலும் பேசிய நீதிபதிகள், “அவர் (பிரியங்கா சர்மா) ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர். தற்போது தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் குற்றவியல் சட்டத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தேர்தல் நேரம் என்பதால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மற்றவருடைய உரிமைகளை மீறும் வகையில் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. மற்றவர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon