மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

திருப்பரங்குன்றம் தேர்தலை ரத்து செய்ய மனு!

திருப்பரங்குன்றம் தேர்தலை ரத்து செய்ய மனு!

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற்றது. இதற்கிடையே ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் முழுவீச்சில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் தேர்தலை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி ஒவ்வோர் அரசியல் கட்சியினரும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பரப்புரைகளில் தங்களின் பலத்தை நிரூபிப்பதற்காகப் பணம் கொடுத்து மக்களை அழைத்துச் செல்கின்றனர். நபர் ஒருவருக்கு 300 முதல் 500 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. அதன்படி தேர்தல் பரப்புரைக்காகத் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கு அரசியல் கட்சிகள் இதுவரை ரூபாய் 25 கோடி வரை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பணப்பட்டுவாடா செய்யப்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஒருவருக்கு ரூபாய் 1,000 வரை கொடுக்கப்படுகிறது.

இதுபோன்று அதிக அளவு பணம் கொடுக்கும் சூழலில் தேர்தல் செலவு கணக்கு எனப் பொய்யான கணக்கைத் தயாரித்து கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கின்றன. தேர்தல் ஆணையமும் கண்மூடித்தனமாக அதை ஏற்றுக் கொள்கிறது. வாக்குக்குப் பணம் கொடுப்பது தொடர்பாகப் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தலை நடத்தினால் அது நியாயமாக இருக்காது. எனவே அத்தொகுதிக்கான இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளிவைத்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

முன்னதாகப் பணப்பட்டுவாடா காரணமாக நடந்து முடிந்த மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon