மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 10

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 10

ஒரு புரட்சிகரமான கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டபோதெல்லாம், அது பல தரப்பினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளது என்பது வரலாறு. எந்தவொரு புதிய, புரட்சிகரமான சமூக -பொருளாதாரக் கொள்கைக்கும் முதலில் மூன்று வகையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படும் என்று அரசியல் பொருளாதார மேதை ஆல்பர்ட் ஹிர்ஷ்மன் The Rhetoric of Reaction எனும் புத்தகத்தில் கூறியிருப்பார். (அ) இது நடைமுறைக்கு ஒத்துவராது, (ஆ) இது பல எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும், (இ) இது மற்ற இலக்குகளை அடைவதைக் கடினமாக்கிவிடும் என்பவையே அவை.

அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை எடுத்துக்கொண்டால், எந்தவொரு நாடும் இதுபோன்ற முயற்சியில் இதுவரை ஈடுபட்டதே இல்லை எனும் வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இன்று நேர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள அனைத்து மக்கள்நலத் திட்டங்களுக்கும் இந்த வாதம் பொருந்துமே! இந்த கருத்தாக்கத்தைச் சாத்தியமாக்குவதற்கான தொழில்நுட்ப, அமைப்பு ரீதியான கட்டமைப்பை உலகின் பல நாடுகளில் உருவாக்குவது இன்றைய காலத்தில் பெரிய சவாலாக இருக்காது எனும் நம்பிக்கை பிறக்கத் தொடங்கியுள்ளது.

சரி, அமைப்பு ரீதியாக இது சாத்தியம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கான பணம் எங்கிருந்து வரும் எனும் கேள்விகள் எழுகின்றன. 2008ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியின்போது பெரும் வணிக வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் திவாலாகாமல் இருப்பதற்கு பல ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பணம் ஒரே வாரத்தில் திரட்டப்பட்டது. முதலாளித்துவத்தைக் காப்பாற்ற வேண்டும் எனும்போது இந்தக் கேள்வியை எவரும் கேட்டதாகத் தெரியவில்லை.

அனைவருக்கும் அடிப்படை வருமானம் அளித்துவிட்டால், மக்கள்நல அரசு என ஒன்று இல்லாமல் போய்விடுமோ எனும் அச்சம் ஏற்படுகிறது. தற்போது உலகெங்கும் அரசுகள் மானிய விலையில் அல்லது இலவசமாக வழங்கிவரும் பல்வேறு பொதுப் பண்டங்கள், பொது சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடுமோ என்பது இடதுசாரியின் கவலையாக இருக்கிறது.

கல்வி, மதிய உணவு, சுகாதாரம், இட ஒதுக்கீடு முதலியவை எல்லாம் மக்களின் திறனை மேம்படுத்துவதற்காகவும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதற்காகவும் அரசாங்கத்தால் வழங்கப்படுபவை. ஒருவேளை உணவு பெறுவதற்கே அல்லல்படும் குடும்பங்களால் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியுமா? அந்தப் பிள்ளைகள் இட ஒதுக்கீடு எனும் ஏணியைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுவது அவ்வளவு சுலபமா? பன்முக வறுமை எனும் பெருந்தடையைக் கடந்து மக்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு அனைவருக்குமான அடிப்படை வருமானம் மிகவும் பயனுள்ள கருவியாக இருக்கும் எனும் தவிர்க்கமுடியாத வாதத்தை அவ்வளவு எளிதாக நாம் புறந்தள்ளிவிட்டு செல்ல முடியாது.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 2

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 3

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 5

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 6

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 7

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 8

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 9

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon