மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

பாலியல் புகார்கள்: உச்ச அநீதியும் அவதூறுகளின் சுமையும்

பாலியல் புகார்கள்: உச்ச அநீதியும் அவதூறுகளின் சுமையும்

பெருந்தேவி

ரஞ்சன் கோகாய் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக, போப்தே தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் பங்கேற்ற உட்குழு நடத்திய விசாரணையிலிருந்து, புகார் கொடுத்த பெண் விலகிக்கொண்டது நமக்குத் தெரியும். அவ்வாறு விலகிக்கொண்டதற்கு ஒரு காரணமாக, நீதிபதிகள் விசாரணையில் முன்வைத்த கேள்வி ஒன்றைக் குறிப்பிட்டார். எதனால் அந்தப் பெண் தலைமை நீதிபதி மீது தாமதமாகப் புகார் தந்தார் என நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள்.

பாலியல் புகார் அளிக்கும் பெண்ணைப் பார்த்து பொதுப்புத்தியிலிருந்து கேட்கப்படும் கேள்வியை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் கேட்டிருப்பது விசித்திரம். பணியிடத்தில். பணிமாற்றம், இடைநீக்கம் எல்லாம் நடந்தபின் புகார் கொடுக்கும்போதே நீதிமன்றமும் இதர காவல் துறை போன்ற அரசு அமைப்புகளும் தங்கள் வலிமையை, அதிகாரத்தை, புகார் தந்த பெண்ணிடம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே, பட்டியல் இனத்தவர் என்பதால் தன் வாழ்க்கையில் பிரச்சினைகளை, அவமானங்களைச் சந்தித்துப் போராடிவந்திருப்பவர் அந்தப் பெண். இப்போது நீதிபதிகளின் உட்குழு அவர் தந்த புகாருக்கு முகாந்தரம் இல்லை என்று தெரிவித்திருப்பது அவருக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இனி நீதித் துறையில் சேர்ந்து பணி செய்வதில் நம்பிக்கை போய்விட்டது என தன் சமீபத்திய நேர்காணல் (ஸ்க்ரால், தி வயர்) ஒன்றில் தெரிவிக்கிறார்

இதுதான் யதார்த்த நிலை எனும்போது அந்தப் பெண் வேலையிலிருக்கும்போதே தலைமை நீதிபதி மீது புகார் தருவதன் சிரமத்தைப் புரிந்துகொள்ளுதல் அத்தனை கடினமல்ல. மே 8 அன்று வெளியிடப்பட்டிருக்கும் PUCL அறிக்கை, மூத்த உயர் நீதிமன்ற நீதிபதிகளை எதிர்கொள்ளும்போது, அந்தப் பெண்ணுக்கு நேரக்கூடிய பதற்றம், உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவற்றை நுண்ணுணர்வோடு உச்ச நீதிமன்றம் அணுகவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது. தவிர, மூத்த நீதிபதிகளுக்கும், சாதாரண முன்னாள் ஊழியருக்கும் இடையே இருக்கும் அதிகாரச் சமச்சீரற்ற நிலையையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

முன்னுதாரணம் இல்லாத அராஜகம்

மேலும், நீதிபதிகளின் உட்குழு அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாவிட்டாலும், “Sexual Harassment of Women at the Workplace (Prevention, Prohibition and Redressal) Act 2013 in Section 13இன்படி, புகார் அளிப்பவர், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் இருவருக்கும் அது வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தப் பெண்ணுக்கு அந்த அறிக்கை வழங்கப்படவில்லை. முன்னுதாரணமே இல்லாத அராஜகமாக இந்த விசாரணை நடந்திருக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை, கௌரவத்தை, சமத்துவத்தைக் காக்கும் என்று நம்பப்படுகிற உயரிய இடத்தில்கூட due process நடக்கவில்லை.

நாட்டின் உச்ச நீதிமன்றமே due process விஷயத்தில் அநீதியோடு நடந்துகொள்கிறது எனும்போது சாதாரணப் பணியிடங்கள், பல்கலைக்கழகங்கள் முதலியவற்றில் இது நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஐயமே எழுகிறது. சமீபத்தில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி தொடர்பான ஒரு விவகாரத்தைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. சென்ற மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இது குறித்து முதலில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. விலங்கியல் துறை மாணவிகள் துறை சார்ந்த பயணமாக வெளியூர் சென்றபோது அவர்களிடம் பேராசிரியர்கள் சாமுவேல் டென்னிசன், ரவீண் ஆகியோர் தகாத விதத்தில் தொடுதல்கள், ஆபாச வார்த்தைகள் என அத்துமீறியிருக்கிறார்கள்.

பயணத்திலிருந்து திரும்பிய பின் மாணவிகள் துறையில் பெயரிலியாகப் புகார் செய்திருக்கிறார்கள். அது கண்டுகொள்ளப்படாததால் பயணித்த ஐம்பது மாணவர்களில் முப்பத்தாறு பேர் எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்ட புகார் ஒன்றைக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாசனிடம் அளித்திருக்கிறார்கள். விசாரணை போல ஒன்றை முதல்வரே நடத்தி விவகாரத்தை முடிக்கப் பார்த்திருக்கிறார். இதற்கு முன் இந்த இரண்டு பேராசிரியர்களையும் பற்றிப் புகார் எதுவும் வரவில்லை என்று கூறி ‘எச்சரிக்கையோடு’ கல்லூரி நிர்வாகத்தால் அவர்கள் விடப்படுகிறார்கள். இனி இத்தகைய துறை சார்ந்த பயணங்களுக்கு அவர்கள் மாணவர்களோடு கூட வர மாட்டார்கள், இந்த மாணவர்களின் தேர்வுத் தாள்களைத் திருத்த மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதாவது இந்த விசாரணையில் பாலியல் அத்துமீறல் குற்றத்தைச் செய்த பேராசிரியர்களுக்கான தண்டனை என்பது, அந்தப் பேராசிரியர்களுக்கும் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் உள்ள தொடர்பைத் துண்டிப்பதாக மாத்திரமே இருந்திருக்கிறது. அந்தச் சமயத்தில், பேராசிரியர்களில் ஒருவர் 1997-2000இல் ஏற்கெனவே இத்தகைய பாலியல் புகார் ஒன்றால் 15 நாட்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது மாணவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. கல்லூரி நிர்வாகம் பொய் கூறிய காரணத்தால் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அதன்பின், கல்லூரியில் பாலியல் புகார் விசாரணைக் கமிட்டி அமைக்கப்படுகிறது. சென்ற மாதம் ஏப்ரல் 26 அன்று கமிட்டி இருவரது குற்றங்களையும் உறுதி செய்திருக்கிறது. அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் பல்வேறு வர்க்க, சாதி அடுக்கு நிலைகளிலிருந்து வந்திருப்பார்கள். அவர்கள் சந்தித்த கொடுமைகளை வெளிப்படையாகப் பேசி போராட்டம் சாத்தியமாகி, வெற்றியும் பெற்றிருக்கிறது. பொதுவெளியில் இன்று முன்பைப் போல பெருமளவு சங்கடமோ, தயக்கமோ இன்றி, பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர் தரப்பிலிருந்து வாழ்வனுபவங்கள் பேசப்படுகின்றன. அதுவும் இத்தகைய போராட்டங்களுக்கு உந்துசக்தியைத் தந்திருக்கிறது.

மீறப்பட்ட வழிகாட்டி விதிகள்

தலைமை நீதிபதி கோகாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அவசரத்தன்மையையும் பக்கச் சார்பையும் முன்முடிவுகளையும் எடுத்துக்காட்டும் விதமாக, பத்திரிகையாளர் கௌரவ் ஜெயின் ஃபர்ஸ்ட்போஸ்ட் இதழில் இருபது கேள்விகளை எழுப்பியிருக்கிறார். பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் வகையிலான சட்டமும், விசாகா வழிகாட்டி விதிகளை (Prevention of Sexual Harassment Against Women at the Workplace Act and the Vishaka Guidelines) உச்ச நீதிமன்ற விசாரணையில் பின்பற்றாததைக் குறிப்பிட்டு, இதை முன்னிட்டே அந்தப் பெண் வழக்கு தொடரலாமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஒருவேளை, விசாகா வழிகாட்டி விதிகள் உச்ச நீதிமன்றத்துக்குப் பொருந்தாது என்றால் பிறகு எந்தச் சட்டம் அங்கே வேலை பார்க்கும் ஊழியர்களின் பாலியல் துன்புறுத்தல் புகார்களை வழிநடத்தக்கூடியது எனக் கேட்டிருக்கிறார். எத்தனை அடிப்படையான கேள்விகள் இவை! இவற்றைக்கூட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்குழு பரிசீலித்ததாகத் தெரியவில்லை. பாலியல் புகாரை விசாரிக்க விசாகா வழிகாட்டி விதிகளை முன்மொழிந்த உச்ச நீதிமன்றமே அவற்றைக் கருத்தில் கொள்ளாதது பெண்ணியலாளர்கள், மனித உரிமைக் களத்தில் பங்காற்றுபவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் அதிர்ச்சி தந்திருக்கிறது.

சென்னை கிறிஸ்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் முன்மொழிந்த விசாகா விதிகளை ஒட்டி, பல்கலைக்கழக மானியக் குழு 2015ஆம் ஆண்டு ஒழுங்கு விதிகளை வடிவமைத்திருக்கிறது. அதன்படி, உயர்கல்வி நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம். ஆனால், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களிலேயே, பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய நெருக்கடியான தருணங்களில்தான் விசாகா கமிட்டி அமைக்கவே முயற்சி எடுக்கப்படுகிறது. இன்னும்கூடப் பல உயர்கல்வி நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைப்பு இல்லை என்றுதான் நாளிதழ்களிலிருந்து அறிகிறோம்.

MeToo புகார்களுக்கு எதிரான கேள்விகள்

பெண்கள் எதற்கு சமூக வலைதளங்களில் MeToo பாலியல் புகார்களை முன்வைக்கிறார்கள், எதனால் பணியிடங்களில் புகார்களைத் தருவதில்லை, இந்தப் புகார்களை ஏன் வேலையை விட்டு வெளிவந்த பின்னரே பெரும்பாலும் கூறுகிறார்கள் எனக் கேள்வி மேல் கேள்வி எழுப்புபவர்கள் மேலே விவாதித்த இரண்டு விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டும்.

ஒன்று, இத்தகைய புகார்களைக் கருத்தில்கொண்டு விசாரிக்க, ஜனநாயகபூர்வமான அமைப்புக்குச் சட்டம் வழி செய்திருந்தாலும், சட்டத்தையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்கிய உச்ச நீதிமன்றம் என்ற உயரிய இடத்திலேயே அந்த அமைப்பின் இன்மையை அறிகிறோம். இரண்டாவது, ஒரு பெண் பாலியல் புகார் தரும்போது, சமத்தன்மை அற்ற அதிகார இயங்கியல் மிரட்டலை நோக்கி நகர்வதாகவும் இருக்கிறது.

கோகாய் பற்றிப் புகார் கொடுத்த பெண் தனது நேர்காணலில், போப்தே உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு வந்தபோது தான் நடத்தப்பட்ட விதம் குறித்துக் கூறியிருக்கிறார். நான்கு பெண் காவல் துறையினர் அவர் உடையை, தலைமுடியைத் திறந்து சோதித்ததாகவும் தான் “தீவிரவாதி”யைப் போல நடத்தப்பட்டதாகவும் வருந்தியிருக்கிறார். தவிர, வக்கீல்களிடம் பேசக் கூடாது, ஊடகத்திடம் பேசக் கூடாது என்றெல்லாம் “அறிவுறுத்த”ப்பட்டிருக்கிறார். விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்துவிட்டுத் திரும்பியபோது முகம் தெரியாத சில நபர்களால் பின்தொடரப்பட்டிருக்கிறார். உத்தரப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் அவர் உறவினர்களை முன்பின் அறியாதவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். தனது சாதியின் காரணமாகத்தான் இந்த அளவுக்கு அவமானப்படுத்தப்படுகிறோம் என்று தோன்றுவதாகவும் நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.

போலவே, சென்னை கிறிஸ்துவக் கல்லூரி பாலியல் புகார் விவகாரத்திலும், பாதிக்கப்பட்ட ஒரு மாணவியிடம் புகாரைத் திரும்பப் பெறக் கூறி நான்கு ஆண்கள் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே அச்சுறுத்தியிருக்கிறார்கள். புகைவண்டி நிறுத்தத்திலும் இரு மாணவிகளை ஒருவர் மிரட்டியிருக்கிறார்..

உச்ச நீதிமன்ற விசாரணை வழக்கு நடந்த விதம், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி தொடக்கத்தில் புகாரை முன்வைத்த மாணவிகளை நடத்திய விதம், இவற்றைக் கூர்ந்து நோக்கினால் பாலியல் புகார் என வரும்போது சமூகத்தின் பால் பாகுபாடு வெளிப்படையாகச் செயல்படுவதைப் பார்க்கிறோம். பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பெண்கள் பெயர் சொல்லி அவமானப்படுத்துவது என்பது இத்தகைய பாகுபாட்டாலேயே மேலெழுந்திருக்கிறது.

MeTooவை “ஊடக விசாரணை” (media trial) எனக் குறை கூறுபவர்கள், பாலியல் புகார்களைத் தைரியமாக முன்வந்து தருபவர்களுக்குக் கிட்டாத நீதியின் பின்னணியில் தங்கள் பார்வையை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.

உதவிய செய்தித்தள, இணையச் சுட்டிகள்:

The Ladies Finger

New Indian Express

Times of India

The Newsminute

Scroll.in

Firstpost.com

குற்றச்சாட்டும் விசாரணை நடைமுறையும்

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon