மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஆளுங்கட்சி வென்றால்தான் கோரிக்கை நிறைவேறும்: முதல்வர்

ஆளுங்கட்சி வென்றால்தான் கோரிக்கை நிறைவேறும்: முதல்வர்

ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றிபெற்றால்தான் மக்களின் கோரிக்கை நிறைவேறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தைக் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கினார். நேற்று (மே 13) அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து சீத்தப்பட்டி காலணி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இனங்கனூர், குரும்பப்பட்டி, ஆண்டிப்பட்டி கோட்டை, ஈசநத்தம் ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இனங்கனூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பேசுகையில், “இங்கு திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் செந்தில் பாலாஜி. தன்னை எம்.எல்.ஏ.வாக்கி, அமைச்சராக்கி அழகுபார்த்த கட்சிக்கே அல்வா கொடுத்தவர் மக்களுக்கு நன்மை செய்வாரா? நான்கரை ஆண்டுக்காலம் அமைச்சராக இருந்தவர் இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தாரா? அல்லது வெற்றிபெற்றதற்கு நன்றியாவது கூறினாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

“கடந்த முறை ஜெயலலிதாவின் ஆசியோடு இதே அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். நான் உள்பட அமைச்சர்கள் எல்லாம் இங்கு தங்கி பணியாற்றி அவரை வெற்றிபெற வைத்தோம். பல கட்சிகளுக்குச் சென்றுவந்த செந்தில் பாலாஜி, தற்போது திமுக சார்பில் போட்டியிடுகிறார். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றால் அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வரைச் சந்தித்து உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி ஒருவேளை வெற்றிபெற்றால் அவர் எப்படி எங்களை வந்து சந்திப்பார். நீங்கள் அவரிடம் அளிக்கும் மனுவாவது எங்களிடம் வந்து சேருமா? எனவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வெற்றிபெற்றால்தான் உங்களின் கோரிக்கை நிறைவேறும்” என்றவர்,

செந்தில் பாலாஜியை ஆட்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளவர் என்று விமர்சித்த அதே ஸ்டாலின்தான் இன்று அவரை நல்லவர், வல்லவர் என்று கூறுகிறார் என்றும் விமர்சித்தார்.

மேலும், “செந்தில் பாலாஜி செல்லும் இடங்களில் எல்லாம் நிலம் தருவோம் என்று கூறுகிறார். 25,000 குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் நிலம் கொடுப்பார்களாம். அப்படியென்றால் சாலை, பொது இடம் உள்பட 1,100 ஏக்கர் அதற்குத் தேவைப்படும். எங்கே போவது அவ்வளவு இடத்துக்கு. ஆக பச்சைப் பொய்யைப் பேசுகிறார்கள். ஆளும்கட்சியாக இருந்தால்கூட எங்காவது இடத்தைப் பார்த்துக் கொடுக்க முடியும். எதிர்க்கட்சியான இவர்களால் எங்கு கொடுக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon