மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

அட்மிஷனில் மட்டுமே இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம்

அட்மிஷனில் மட்டுமே இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம்

எந்த வகுப்பைச் சேர்ந்த இட ஒதுக்கீடாக இருந்தாலும் சேர்க்கையின்போது மட்டுமே பின்பற்றப்படும் என்றும், தகுதித் தேர்வின்போது பின்பற்றப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

வரும் ஜூலை 7ஆம் தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின்போது, இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கணக்கில் கொள்ள வேண்டுமென்று ரஜனீஷ் குமார் பாண்டே உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

“2019 ஜனவரி 23ஆம் தேதியன்று வெளியான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விளம்பரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு குறிப்பிடப்படவில்லை. பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோர் வரிசையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினரையும் சேர்க்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவானது நேற்று (மே 13) நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா அடங்கிய விடுமுறைக் கால அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதித் தேர்வுகளைப் பொறுத்தவரை எந்தவித இட ஒதுக்கீடும் கிடையாது என்று தெரிவித்தனர் நீதிபதிகள். எந்தப் பிரிவைச் சேர்ந்த இட ஒதுக்கீடாக இருந்தாலும், அது சேர்க்கையின்போது மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினர்.

“மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு மட்டுமே. இட ஒதுக்கீடு விவகாரம் சேர்க்கை நேரத்தில் மட்டுமே பின்பற்றப்படும். சம்பந்தப்பட்ட விளம்பரத்திலும் கூட பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் தொடர்பான எந்த வித இட ஒதுக்கீடு அறிவிப்பும் இடம்பெறவில்லை” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon