மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 மே 2019

மிரட்டும் அமானுஷ்யக் கதைகள்!

மிரட்டும் அமானுஷ்யக் கதைகள்!

கேபிள் சங்கர்

ஒரே விதமான கதைக் கருக்களை வைத்து நான்கைந்து கதைகளைத் தொகுத்து ஒரே திரைப்படமாய் வழங்கும் அந்தாலஜி வகைப் படங்கள் உலகில் பல மொழிகளில் வருகின்றன. சமீபத்தில் நாங்கள் எடுத்து வெளியிட்ட ‘6 அத்தியாயம்’ எனும் படம்கூட அந்த வகையைச் சார்ந்ததுதான். ஆறு அமானுஷ்யக் கதைகளின் தொகுப்பு அந்தப் படம். அமானுஷ்யங்களில் காதல், காமெடி, செக்ஸ், த்ரில், மனோதத்துவம், பீரியட் என அமானுஷ்யங்களின் வகைகளில் ஒன்றாய்த் தொகுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதற்குக் காரணம் அதனுடைய பட்ஜெட்.

ஆனால், இதேபோல எல்லா அந்தாலஜி படங்களும் கமர்ஷியலாக வெற்றி பெறுவதில்லை. பெரும்பாலான ரசிகர்கள் தொடர்ந்து ஒரே கதையைப் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தைப் போல அந்தாலஜி கதைகளைப் பார்க்க விழைவதில்லை. தற்போது அதற்கான சரியான மேடை ஓ.டீ.டீ. ஒரே கருவைக் கொண்ட கதைகளின் தொகுப்பான ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ நெட்ஃப்ளிக்ஸில் ஒரு திரைப்படமாய் வந்து மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. அதுபோல இப்போது பல வெப் சீரிஸ்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. உலக அளவில் நிறைய இருந்தாலும், இந்திய அளவில் இந்தப் போக்கு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. அதில் சமீபத்திய வரவு High Priestess என்னும் தெலுங்கு வெப் சீரீஸ்.

அமலா ஒரு டாரட் கார்ட் ரீடர். அமானுஷ்ய பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர். அவரிடம் வரும் வாடிக்கையாளர்களின் பிரச்சினையோடு ஆரம்பிக்கிறது முதல் எபிசோட். அப்போது அவரைச் சந்திக்க வருகிறார் கிஷோர். அமலாவுக்கும் கிஷோருக்குமிடையே கல்லூரி நாட்களில் காதல் என்று கதை ஆரம்பிக்கிறது. தன்னிடம் உள்ள சில பொருட்களை வைத்துத் தன் வாடிக்கையாளர்களின் பிரச்சினை குறித்து அவரிடம் பேசுகிறார் அமலா. இந்தப் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் ஒரு கதையாய் விரிகிறது.

ஒவ்வொரு கதையும் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது. நடு நடுவே இவர்களின் காதல், அது ஏன் பிரிவாய் மாறியது என்ற கேள்விகளுக்கான காட்சிகள் எனக் கதை போகிறது. க்ளைமேக்ஸில் ஒரு திருப்பத்துடன் முதல் சீசன் முடிகிறது.

மொத்தமாய் வந்திருக்கும் எட்டு எபிசோடுகளில் இரண்டொரு அமானுஷ்யங்கள் நிஜமாகவே உறையவைப்பவை. மற்றவையெல்லாம் விஷுவலாய் மிரட்ட முயற்சி செய்திருந்தாலும், சரக்கில் அழுத்தமில்லை.

அமலா, வரலட்சுமி சரத்குமார், சுனைனா, கிஷோர் எனப் பல தமிழ், தெலுங்கு பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். சுனைனா, வரலட்சுமி அளவுக்குக்கூட அமலா சோபிக்கவில்லை என்பதே சோகம். பழைய அமலாவை நினைத்து இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் பாவம். ஸ்லோ மோஷனில் பேசி எல்லா எமோஷன்களையும் காலி பண்ணிவிடுகிறார். அமலாவுக்கு ‘டச்’ விட்டுப் போய்விட்டதா, இல்லை இவ்வளவு போதும் என்று நினைத்துவிட்டார்களா என்று புரியவில்லை. டாரட் ரீடிங் காட்சிகளில் எல்லாம் படு செயற்கை.

ஒரு பொம்மையை வைத்துச் சொல்லப்பட்ட கதை நிஜமாகவே பயங்கரம். வாஷிங் மெஷினில் காணாமல்போன பையன் கதை சுவாரஸ்யம். ஆனால், அக்கதையில் க்ளைமேக்ஸ் கொஞ்சம் நாடகத்தனமாக இருக்கிறது. சுனைனாவின் கதையில் தேவையேயில்லாமல் பாடல் எல்லாம் போடுகிறார்கள். இந்த இம்சையெல்லாம் வேண்டாம் என்றுதானே தியேட்டருக்குப் போகாமல் இருக்கிறோம். சீரிஸுக்கும், திரைப்படத்துக்குமான வித்தியாசம் புரியாமல் பாடல்களைப் போடுவது அபத்தமாய் இருக்கிறது. சுனைனா கதையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு, இந்த சீரிஸுக்குப் பெரிய ப்ளஸ். பின்னணி இசை, டெக்னிக்கல் சமாச்சாரங்கள் ஆங்காங்கே கொஞ்சம் அச்சுறுத்தும் காட்சியமைப்புகள், வசனங்கள் ஆகியவை சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாமல் காப்பாற்றுகின்றன.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

செவ்வாய் 14 மே 2019