மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

கமல் நாக்கை அறுக்க வேண்டும்: ராஜேந்திர பாலாஜி

கமல் நாக்கை அறுக்க வேண்டும்: ராஜேந்திர பாலாஜி

கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று சாடியிருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கமல்ஹாசன் பேசியது சரிதான் என்று கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

தூத்துக்குடியில் நேற்று (மே 13) செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, “கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவருக்கு நாக்கில் சனி இருக்கிறது. தீவிரவாதத்துக்கு இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மதமெல்லாம் கிடையாது. இந்து தீவிரவாதி என்று சொல்லி சிறுபான்மையினர் ஓட்டை வாங்க நடிக்கும் கமலின் நாக்கை ஒரு காலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் விஷமாக இருக்கிறது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசும் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கட்சியைத் தடைசெய்ய வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அமைச்சரின் பேச்சுக்குச் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “காந்தியைக் கொலை செய்த கோட்சே கொலைகாரன்தான். ஆனால், சமுதாயத்துக்கு அச்சம் உண்டாக்கினான் என்று கூற முடியாது. எனவே, அவனை பயங்கரவாதி என்று கூறுவதே தவறு. கமல்ஹாசன் ஒரு மகா முட்டாள். அவருக்கு என்ன பேச வேண்டும், எங்கு பேச வேண்டும் என்று தெரிவதில்லை. அவரை சிறைக்கு அனுப்புவதைவிடப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்ப வேண்டும்” என்று விமர்சித்தார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon