மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

மரியாதை நிமித்தமான சந்திப்பு: ஸ்டாலின்

மரியாதை நிமித்தமான சந்திப்பு: ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்த திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று (மே 13) தமிழகம் வந்திருந்தார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர ராவ், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். கிண்டியிலுள்ள தனியார் விடுதியில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தவர், சுமார் 4.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு வந்தார். அவரை ஸ்டாலின், வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். சந்திரசேகர ராவ் அவருக்கு பூங்கொத்து கொடுக்க, பதிலுக்கு பொன்னாடை அணிவித்து கலைஞரின் சிலையை பரிசாக அளித்தார் ஸ்டாலின்.

அதன்பிறகு இருவரும் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, மூன்றாவது அணி தொடர்பாக சந்திரசேகர ராவ் பேசியிருக்கிறார். அவரிடம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்கும்படி ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனையின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்திக்காமலேயே சந்திரசேகர ராவ் புறப்பட்டுச் சென்றுவிட்டார். மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில் இருவரும் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, சந்திரசேகர ராவை சந்தித்தது குறித்து திமுக வெளிப்படையாக செய்தியாளர்களை சந்திக்காதது ஏன் கேள்வி எழுப்பியுள்ளார். “திமுகவுக்கு நிறம்மாறும் தன்மை இருக்கிறது. நிறத்தை மாற்றிப் பார்க்க சந்திரசேகர ராவ் வந்துள்ளார். 10 அணிகள் அமைந்தாலும் அதனால் பாஜகவின் வெற்றிவாய்ப்பில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை” என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon