மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

ஃபோனி: ஒடிசாவுக்குத் தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியது!

ஃபோனி: ஒடிசாவுக்குத் தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியது!

ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்குத் தமிழக அரசு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளது.

கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தை ஃபோனி புயல் தாக்கியது. இதில் மாநிலத்தின் பூரி உட்பட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இன்றைய நிலவரப்படி ஒடிசாவில் 64 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பூரி பகுதியில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. இந்தநிலையில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக், ”புயல் பாதிப்பால் சுமார் 10 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். படிப்படியாகச் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சம் சிறப்பு வீடுகளை கட்டித் தரவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்துக்கு உதவ பல்வேறு மாநிலங்களும் முன்வந்துள்ளன. அண்மையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.10 கோடி அறிவித்திருந்தார். தற்போது தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் ஃபோனி புயலால் ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு அம்மாநில அரசுக்கும், மக்களுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 கோடி நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 5ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் முதல்வர் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள ஒடிசா பவனின் மேலாளர் ரஞ்சித் குமார் மொஹந்தியை சந்தித்த தமிழக நிதித் துறை கூடுதல் செயலர் க.சண்முகம், 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon