மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 12 நவ 2019

3 நாட்களுக்கு அனல் காற்று!

3 நாட்களுக்கு அனல் காற்று!

நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

கடந்த 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் பருவம் தொடர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் வெயிலின் தாக்கம் உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, சில இடங்களில் மழைப்பொழிவும் இருந்து வருகிறது.

நேற்று (மே 12) நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 4 செ.மீ., நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணியில் 3 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் 2 செ.மீ., சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் ஊட்டியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இது தொடர்பாக, இன்று (மே 13) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இன்னும் மூன்று நாட்களுக்கு வெப்பச்சலனம் அதிகமிருக்கும் என்றும், இதனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பெருமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், அந்த நேரத்தில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்றும், மழை பெய்யாத இடங்களில் வெப்பம் அதிகளவில் இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்குமென்றும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி பாரன்ஹீட் என இருக்குமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இன்னும் 4 நாட்களுக்கு வெப்பச்சலனம் இருக்குமென்று தகவல் வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon