மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

தைரியம் இருந்தால் கைது செய்யுங்கள்: அமித் ஷா

தைரியம் இருந்தால் கைது செய்யுங்கள்:  அமித் ஷா

“நான் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறேன். தைரியமிருந்தால் என்னைக் கைது செய்யுங்கள்” என்று மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6வது கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் வரும் மே 19 தேதி நடைபெறுகிறது. அதில் மேற்கு வங்கத்தின் சில தொகுதிகளும் அடங்கியுள்ளது.

இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்காக மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூரில் பிரம்மாண்ட பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் அங்கு பாஜகவிற்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, பேரணி நடத்த மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. அங்கு அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுத்தது. இதனையடுத்து ஜாய்நகர், விஷ்ணுபூர் ஆகிய இடங்களில் மட்டுமே அவர் பேசினார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமித் ஷா, “இன்று நான் மூன்று பிரச்சாரக் கூட்டங்களில் பேச திட்டமிட்டிருந்தேன். மம்தா மருமகன் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலில் அவர் தோற்றுப் போய்விடுவார் என்ற பயத்தின் காரணமாகவே மம்தா அரசு, பாஜக பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜகவின் பேரணியைத்தான் மம்தாவால் தடுக்க முடியும். வெற்றியைத் தடுக்க முடியாது” என்று குற்றம்சாட்டினார்.

சில நாட்களுக்கு முன்பு மம்தா காரில் சென்றபோது, அவரை நோக்கி சிலர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இதனையடுத்து காரிலிருந்து இறங்கிவந்த மம்தா கோஷமிட்டவர்களை கண்டித்தார். விஷ்ணுபூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதனை குறிப்பிட்டுப் பேசிய அமித் ஷா, “மம்தாவுக்கு ஜெய் ஸ்ரீராம் என்றால் கோபம் வருகிறது. ஜெய் ஸ்ரீராம் என நான் இங்கு முழக்கமிடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னைக் கைது செய்யுங்கள்” என சவால் விட்டார்.

பேரணிக்கு மேற்குவங்க அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு உடனே நடவடிக்கை எடுக்குமாறு பாஜக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக, “பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பது ஜனநாயக படுகொலை. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். முக்கிய தலைவர்கள் பேரணி நடத்த அனுமதி இல்லை என்றால், தேர்தலுக்கு என்ன அர்த்தம்” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon