மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

குத்துச் சண்டை பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

குத்துச் சண்டை பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

அருண் விஜய் நடிப்பில் மார்ச் மாதம் வெளியான தடம் திரைப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்த அந்தப் படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்திவருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அருண் விஜய்யின் பிறந்தநாளின் போது அவர் அடுத்ததாக நடிக்கும் பாக்ஸர் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. விவேக் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்கிறார். அவரும் குத்துச் சண்டை வீராங்கனை என்பதால் கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி நடிப்பார் என்பதால் படக்குழு அவரை ஒப்பந்தம் செய்தது.

அருண் விஜய் தற்போது பாக்ஸர் படத்திற்காக தன்னை தயார்படுத்திவருகிறார். அந்தவகையில் வியட்நாம் சென்றுள்ள அவர் அங்குள்ள லியன்போங் பயிற்சி மையத்தில் தற்காப்பு கலைகளை பயின்றுவருகிறார். தனது பயிற்சியை இன்று (மே 13) தொடங்கியுள்ளதாக அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மார்கஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு லியோன் இசையமைக்கிறார். மதன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். எக்செட்ரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். தற்போது மற்ற நடிகர், நடிகைகளை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றுவருவதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon