மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

கர்ப்பிணியின் கழுத்தை அறுத்த பெண்!

கர்ப்பிணியின் கழுத்தை அறுத்த பெண்!

முதலாவது மனைவியான தன்னை விட இரண்டாவது மனைவியிடம் கணவர் அதிக பாசம் காட்டுகிறார் என்ற கோபத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரைச் சேர்ந்தவர் முகம்மது ரஷீத். இவர் பாலவாயலில் ஒரு இறைச்சி கடையை நடத்தி வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்னர், இவருக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த சுராகாத்தூண் என்ற பெண்ணுக்கும் திருமணமானது. இவர்களுக்கு ரேஷ்மி என்ற மகளும் முகமது ஷஜின் என்ற மகனும் உள்ளனர்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர், வங்கதேசத்தில் இருந்து தனது உறவினரான ஜெரினா பேகத்தை அழைத்து வந்தார் சுராகாத்தூண். பல இடங்களில் வரன் தேடியும், ஜெரினாவுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் சென்னையில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தார். இந்த சூழலில் சுராகாத்தூண் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, தனது கணவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறும், இருவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியோடு இருக்கலாம் என்றும் ஜெரினாவிடம் கூறியுள்ளார் சுராகாத்தூண். அவரும் சம்மதிக்கவே, முகம்மது ரஷீத் – ஜெரினா பேகம் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஜெஷ்மி என்றொரு மகள் உள்ளார். தற்போது, மீண்டும் ஜெரினா கர்ப்பமடைந்துள்ளார்.

இரண்டாவது திருமணம் செய்தபிறகு, தன்னைவிட ஜெரினாவுக்கே ரஷீத் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கருதி வந்துள்ளார் சுராகாத்தூண். ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருக்கும் ஜெரினா மீது, அவர் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார். இதனைக் கண்டு சுராகாத்தூண் கோபமடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நிகழ்ந்துள்ளது. நேற்று (மே 12) காலையில் முகம்மது ரஷீத் இறைச்சிக்கடைக்குச் சென்றுவிட, ஜெரினாவுக்கும் சுராகாத்தூணுக்கும் தகராறு எழுந்துள்ளது. அப்போது, ஜெரினாவின் கழுத்தைக் கத்தியால் அறுத்துள்ளார் சுராகாத்தூண்.

ஜெரினாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சுராகாத்தூணை கைது செய்தனர் போலீசார். இது பற்றி புழல் உதவி ஆணையர் ரவி, செங்குன்றம் ஆய்வாளர் ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon