மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

அமைச்சர்கள் அறையிலும் சோதனை வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன்

அமைச்சர்கள் அறையிலும் சோதனை வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன்

தனது விடுதி அறையில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் அமமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டாள்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். அவரது அறையில் நேற்று திடீரென தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைக் கூறிவரும் நிலையில் அவருடைய அறையில் வருமான வரித் துறை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஊடகத்திற்கு இன்று (மே 13) பேட்டியளித்துள்ள தங்க தமிழ்ச்செல்வன், “திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நானும் வெற்றிவேலும் பொறுப்பாளர்களாக உள்ளோம். எங்கள் வேட்பாளர் மகேந்திரனுக்காக பொதுச் செயலாளர் தினகரன் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சென்றிருக்கிறார். தொகுதியில் மக்கள் எங்களுக்கு அதிகளவில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். அந்த கோபத்தின் காரணமாக நாங்கள் தங்கியிருந்த அறைகளில் சோதனை நடத்தி இருக்கலாம்” என்றார்.

இந்த சோதனையை தவறாக நினைக்கவில்லை என்று குறிப்பிட்ட தங்க தமிழ்ச்செல்வன், “நான் தங்கியிருக்கும் அறையில் பணம் இருக்கிறதென யாராவது தகவல் கூறியிருக்கலாம். எனவே சோதனை நடத்தியதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதுபோலவே அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் இடங்களில் காவல் துறை வாகனங்களில் சோதனை செய்யச் சொல்லுங்கள். அப்படி செய்தால்தான் உண்மை நிலவரம் தெரியும். அவர்கள்தான் பணத்தை வாரி இறைக்கிறார்கள். அது தெரிந்தும் வருமான வரித் துறையும், பறக்கும் படையும் அவர்கள் பக்கம் திரும்பாமல் அமமுக இடங்களில் மட்டும் சோதனை நடத்தி இருப்பது ஒருதலைபட்சமானது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon