மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

நக்சல்களுக்கு எதிராகப் பெண் கமாண்டோக்கள்!

நக்சல்களுக்கு எதிராகப் பெண்  கமாண்டோக்கள்!

இந்தியாவில் முதன்முறையாக நக்சல்களுக்கு எதிராக சத்தீஸ்கரில் பெண் கமாண்டோக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். அம்மாநிலத்தில் சுக்மா, பஸ்தர் உள்ளிட்ட பகுதிகளில் நக்சல்கள் தாக்குதலால் துணைநிலை ராணுவ வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்திருக்கின்றனர். தண்டேவாடாவில் 2010ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 76 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு சுக்மா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழக வீரர்கள் நான்கு பேர் உட்பட 26 பேர் வீரமரணம் அடைந்தனர்.

நக்சல்களின் தாக்குதலால் வீரர்கள் அதிகமாகக் கொல்லப்படுவதை அடுத்து 2017 ஆம் ஆண்டு முதல் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2000 கோப்ரா படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர். எனினும் நக்சல்கள் தாக்குதல் என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த சூழலில் சத்தீஸ்கரில் பெண் கமாண்டோக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கேற்ப போலீசில் சரணடைந்த 5 முன்னாள் நக்சல்கள், தண்டேவாடா காவல்துறையில் பணியாற்றிய உதவி கான்ஸ்டபிள்கள் உட்பட 30 பெண்கள் அடங்கிய சிறப்பு கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் படைக்கு ’தண்டேஸ்வரி ஃபைட்டர்ஸ் ’என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது பஸ்தர் பகுதியில் பணியமர்த்தப்படவுள்ளனர். நக்சல்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆறாவது மாவட்ட ரிசர்வ் பாதுகாப்புப் படை இதுவாகும். கடந்த ஓராண்டுக்கு முன், இளைஞர்கள் கொண்ட ‘பஸ்தாரியா பட்டாலியன்’ என்ற படையை மத்திய பாதுகாப்பு படை ஏற்படுத்தியிருந்தது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்தவர்களும் தற்போது, ‘தண்டேஸ்வரி பைட்டர்ஸ்’ குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தண்டேவாடா எஸ்பி. அபிசேக் பல்லவ் தண்டேஸ்வரி பைட்டர்ஸ் குழுவுக்கு பயிற்சி அளிக்கிறார். அதுபோன்று தண்டேவாடா டிஎஸ்பி தினேஷ்வரி நந்த் பொறுப்பில் இக்குழு இயங்கவுள்ளது.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon