மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் இன்று சந்திப்பு!

ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் இன்று சந்திப்பு!

திமுக தலைவர் ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளை தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி தலைவருமான சந்திரசேகர ராவ் மேற்கொண்டுவருகிறார். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக முன்மொழிந்துள்ள நிலையில், மே 13ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என்று திமுக தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (மே 13) காலை சுவாமி தரிசனம் மேற்கொண்ட சந்திரசேகர ராவ், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரை மாலை 4 மணியளவில் சந்தித்துப் பேசவுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என திமுக தரப்பில் கூறுகிறார்கள். இருப்பினும் தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இந்த சந்திப்பானது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “நாங்கள் கேட்காமலேயே ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தவர் ஸ்டாலின். எனவே அந்த நிலைப்பாட்டிலிருந்து அவர் மாறுவதற்கு வாய்ப்பு கிடையாது. இன்றைய அரசியலில் மூன்றாவது அணி என்பது சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். சந்திரசேகர ராவ் அனைவரையும் பொதுவாகவே சந்தித்துவருகிறார். மூன்றாவது அணி என்று ஸ்டாலினிடம் பேச வந்தால் கூட, அது சாத்தியமில்லை. நீங்கள் மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாருங்கள் என்றுதான் சந்திரசேகர ராவிடம் ஸ்டாலின் கூறுவார்” என்று கூறியிருக்கிறார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon