மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சைக் கேள்வி!

மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சைக் கேள்வி!

காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வென்றால் பிரதமர் நரேந்திர மோடி தூக்கில் தொங்குவாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் பிரதமர் நரேந்திர மோடி ”காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவாக 44 இடங்களை 2014ஆம் ஆண்டில் பெற்றிருந்தது. இந்தமுறை அதையும் பெறாது. அதைவிடக் குறைவாகத்தான் இம்முறை காங்கிரஸ் கட்சி வெல்லும்” என்று கூறி வருகிறார். மோடியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (மே 12) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் கலாபுராகி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இதுகுறித்துப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வெல்லாது என்று கூறி வருகிறார். அதை நீங்கள் நம்புகிறீர்களா? காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வென்றால் மோடி தூக்கில் தொங்குவாரா?” என்று சர்ச்சையை எழுப்பும் விதமாகப் பேசியுள்ளார்.

இவரது கருத்துக்கு பாஜக தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. பாஜகவைச் சேர்ந்த கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியின் எம்பி சோபனா கரண்ட்லஜே டிவிட்டரில், “மூத்த தலைவரிடமிருந்து இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துகளை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அப்பட்டமான பொய்கள், போலிக் குற்றச்சாட்டுகள், தரங்குறைந்த கருத்துகளைச் சொல்வது காங்கிரஸில் பொதுவானதாக உள்ளது. மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon