மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளமொன்றில் வெளியிட்ட பாஜக தொண்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது, நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள பாஜக யுவமோர்ச்சாவை சேர்ந்தவர் பிரியங்கா சர்மா. சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த மெட் கேலா நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் கலந்துகொண்டார். அந்த புகைப்படத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார் பிரியங்கா.
இதையடுத்து திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு வாரங்கள் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பாஜக மற்றும் அதன் இளைஞர் அணி சார்பில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பிரியங்கா கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவரது சார்பில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவுள்ளது நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா அடங்கிய விடுமுறைக்கால நீதிபதிகள் அமர்வு.
நாளை (மே 14) இந்த மனு விசாரணைக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.