மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

ராஜஸ்தானில் அபிநந்தனுக்கு பணி!

ராஜஸ்தானில் அபிநந்தனுக்கு பணி!

இந்திய விமானப் படையைச் சேர்ந்த அபிநந்தன், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள விமானப்படை தளத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் நாட்டில் பாலகோட் பகுதியிலுள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயிற்சித்தளம் மீது தாக்குதல் நடத்தியது இந்திய விமானப் படை. பிப்ரவரி 27ஆம் தேதியன்று பாகிஸ்தான் நாட்டு எஃப் 16 போர்விமானத்தை துரத்திச் சென்று வீழ்த்தினார் இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான். அப்போது, அவர் இயக்கிய மிக் -21 பைசன் விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. அதிலிருந்த அபிநந்தன் பாகிஸ்தானிய ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் அவர் அங்கு வைக்கப்பட்டிருந்தார். மார்ச் 1ஆம் தேதியன்று அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதன்பின் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, ஓய்வில் இருந்தார் அபிநந்தன். குறுகிய இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் அவர் பணியில் சேர்ந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ஸ்ரீநகரில் இருந்து மேற்குப் பகுதி விமானப்படைத் தளத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 11) ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்தில் அபிநந்தன் பணியில் சேர்ந்தார்.

ஆனால், அவரது தற்போதைய பணி குறித்த தகவலை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளது இந்திய விமானப் படை. அதே நேரத்தில், அவர் மீண்டும் பணியில் சேர்ந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் உள்ள விமானப் படை தளத்தில் அவர் பணியாற்றியுள்ளார். தந்தை வர்த்தமான் விமானப் படையில் பணியாற்றியபோது, தனது பள்ளிப்படிப்பை அவர் அங்கு மேற்கொண்டார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon