மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

முதல் தீவிரவாதி இந்து: கமல் கருத்துக்கு தமிழிசை கண்டனம்!

முதல் தீவிரவாதி இந்து: கமல் கருத்துக்கு தமிழிசை கண்டனம்!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மே 19-ம் தேதி நடைபெறும் நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று (மே 12) அவர் பள்ளப்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், " இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் பகுதி என்பதால் இதை நான் சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்பாக இதைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.

மேலும், “நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். இந்த கொலைக்கு கேள்வி கேட்க நான் இன்று வந்திருக்கிறேன் என வைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன். அதை மார்தட்டிச் சொல்லுவேன்" என்று கமல் கூறினார்.

கமலின் இந்த பேச்சுக்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், "காந்தியின் கொலையை தற்போது நினைவுகூர்ந்து அதனை இந்து தீவிரவாதம் என நடிகர் கமல்ஹாசன் கூறுவது கண்டிக்கத்தக்கது. சமீபத்தில் நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கமல்ஹாசன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அவருடைய திரைப்படம் மதக் குழுக்களால் தடைபட்ட போது இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அவர் எச்சரித்தார். ஆனால் இப்போது தன்னை உண்மையான இந்தியன் என்கிறார்” என்று சாடியுள்ளார்.

புதிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கமல் பழையதை கையில் எடுத்து மத விஷம் பரப்புவது வாக்குக்காகத்தானே என்று கூறியுள்ள தமிழிசை, “இது கமலின் அரசியல் வேஷம். தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்லிக்கொள்ள கமலுக்கு எந்த தகுதியும் இல்லை. ஏனெனில் இதுவரை கமல் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடை பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை. ஊருக்கு உபதேசிக்க என்ன தகுதி? அரசியல் நடிப்பு மத உணர்வுகளைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் கமல் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஓட்டுக்காக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கமல் இவ்வாறு பேசுகிறார் என்று ட்விட்டரில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் கருத்து தெரிவித்துள்ளார். “கமல் நீங்கள் ஒரு பெரிய நடிகர். எப்படி கலைக்கு மதம் இல்லையோ, அதேபோல தீவிரவாதத்துக்கும் மதம் இல்லை. கோட்சேவை தீவிரவாதி என்கிறீர். ஏன் குறிப்பிட்டு இந்து தீவிரவாதி என்று சொல்ல வேண்டும்? ஏனென்றால் அது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி” என்று விவேக் ஓபராய் கூறியுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் இன்று அரவக்குறியிச்சியில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon