மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

சசிகலா மே 28இல் ஆஜராக உத்தரவு!

சசிகலா மே 28இல் ஆஜராக உத்தரவு!

தனியார் தொலைக்காட்சிக்கு முறைகேடாக உபகரணங்கள் வாங்கிய வழக்கில் இன்று ஆஜராகாததை அடுத்து வரும் 28ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வி.கே.சசிகலா ஆஜராகப் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் 1996இல் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், சசிகலா, பாஸ்கரன் இரண்டு பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

தற்போது, அமலாக்கத் துறை தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 313ஆவது பிரிவின் கீழ், சாட்சிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதிலைப் பதிவு செய்ய, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை மே 13ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு எழும்பூர் முதலாவது பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மே 2ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, நீதிபதியின் கேள்விகளுக்குக் காணொளிக் காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவிற்குச் சென்னை உயர் நீதிமன்றம் மே 9ஆம் தேதி அனுமதியளித்தது.

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று (மே 13) எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பாஸ்கரன் நேரில் ஆஜரானார். சசிகலா ஆஜராகவில்லை.

உயர் நீதிமன்ற உத்தரவைப் படிக்க வேண்டி இருப்பதாலும், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக எழும்பூர் நீதிமன்றத்தில் போதுமான வசதிகள் இல்லாததால் வரும் 28ஆம் தேதி சசிகலா நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக உத்தரவிட்டார். சாட்சிகள் தெரிவித்த விவரங்கள் குறித்து சசிகலாவிடம் அன்றைய தினம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon