மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளின் நிலை!

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளின் நிலை!

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரும் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 2.68 கோடி; தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 11.79 லட்சம். மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இவர்களின் பங்கு 1.6 விழுக்காடாக இருந்தது. இவர்களில் நடக்கமுடியாதோரின் பங்கு 24 விழுக்காடாகவும், காது கேளாதோரின் பங்கு 19 விழுக்காடாகவும் இருந்தது.

இவர்களில் ஊதியம் ஈட்டித்தரும் வேலை/தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களின் பங்கு 31.4 விழுக்காடு. இது தேசிய சராசரியான 28.2 விழுக்காட்டைவிட அதிகம். தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்த மாற்றுத் திறனாளிகளின் பங்கு 64 விழுக்காடு மட்டுமே. இது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் பங்கைவிடக் குறைவு. மேலும், மாற்றுத் திறனாளிகளில் 0-18 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2.40 லட்சம். இவர்களில் பள்ளிக்கல்வி பெறுபவர்களின் பங்கு 63 விழுக்காடு மட்டுமே.

இவர்களின் நலனை உறுதி செய்யத் தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை அமைத்து அவர்கள் பயன்பெறுவதற்காக 67 நலத்திட்டங்களை அமல்படுத்திவருவதாக தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2017 தெரிவிக்கிறது. 2008-09 – 2017-18 காலத்தில் தமிழக அரசின் மொத்த செலவில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் பங்கு 0.20-0.25 விழுக்காடாக இருந்தது.

குழந்தைகளுக்காக மாநில அரசு செய்யும் மொத்த செலவில் இத்துறையின் பங்கு இந்த பத்தாண்டுகளில் 0.50 விழுக்காட்டிலிருந்து 0.85 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இத்துறையின் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும் அரசு வழங்கும் உதவித்தொகை இந்த பத்தாண்டு காலத்தில் ரூ. 38.16 கோடியிலிருந்து ரூ. 244. 49 கோடியாக உயர்ந்துள்ளது.

தென்மாநிலங்களில், தமிழகத்தில்தான் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் மாற்றுத் திறனாளிகளின் பங்கு குறைவு. கர்நாடகா, கேரளாவில் மக்கள்தொகையில் இவர்களின் பங்கு 2.3 விழுக்காடு. ஆந்திரப் பிரதேசத்தின் மக்கள்தொகையில் இவர்களின் பங்கு 2.7 விழுக்காடு. மாற்றுத் திறனாளிகளின் நலனை உறுதிசெய்ய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், இவர்களுக்கான திட்டங்களையும், சேவைகளையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடிவதில்லை என்று அந்தந்த மாநில அரசுகளின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் Performance Budget தெரிவிக்கின்றன.

தாங்கள் விரும்பும் வாழ்க்கையை மக்கள் வாழ எடுக்கப்படும் முயற்சியில், அவர்கள் சந்திக்கும் இடர்களைக் களையவும், சுதந்திரமாகச் செயல்படவும் அவர்களுடைய ஆற்றல்கள் மேம்பட வேண்டும். அதுவே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் சந்திக்கும் இடர்களைக் களைவதற்கு அரசும் சமுதாயமும் சேர்ந்து பாடுபட வேண்டும்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon