மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 நவ 2019

பிரச்சாரத்தில் தாமதம் ஏன்? பிரேமலதா விளக்கம்!

பிரச்சாரத்தில் தாமதம் ஏன்? பிரேமலதா விளக்கம்!

4 தொகுதி இடைத் தேர்தலிலும் ஏன் இதுவரை பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பது குறித்து பிரேமலதா பதிலளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கூட்டணி தர்மத்தின்படி 4 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தேமுதிக தெரிவித்திருந்தது. அதிமுகவுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்த கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தேமுதிக சார்பில் தலைவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

சென்னை சாலிகிராமத்தில் இன்று (மே 13) தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்துவைத்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, அங்கிருந்தவர்களுக்கு இளநீர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பிரச்சாரத்தில் ஈடுபடாதது குறித்த கேள்விக்கு, “பிரச்சாரம் செய்வதில் எந்த தாமதமும் கிடையாது. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுதான். ஏற்கனவே முதல்வர், துணை முதல்வரெல்லாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருவதால் செல்லவில்லை. நாளை முதல் பிரச்சாரத்தை துவங்கவுள்ளேன். கிளைமாக்ஸில் சென்றால் மிகப்பெரிய ரீச் இருக்கும். நாளை காலை முதல் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்” என்று தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “கோடைக் காலம் வருவதால் தமிழகத்திலுள்ள நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் பிரதமராக மோடி மீண்டும் அமர்ந்தவுடன் அவரிடம் நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தேமுதிக சார்பில் வலியுறுத்தப்படும்” என்றும் கூறினார். மேலும் மூன்றாவது அணி அமைப்பதற்கான சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon