மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கையில் சமூக வலைதளங்களில் பரவிய கருத்தால் உருவான கலவரத்தை அடுத்து மீண்டும் அங்கு சில பகுதிகளில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலால் 258 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குத் தொடர்புடைய பலர் கைதாகியுள்ளனர், தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தொடர் குண்டுவெடிப்பால் இலங்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டன. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று (மே 12) மசூதிகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன.

அப்துல் ஹமீத் முகமது ஹஸ்மர் என்னும் பெயருடைய முகநூல் பதிவில். “ரொம்ப சிரிக்க வேண்டாம், ஒரு நாள் நீங்கள் அழுவீர்கள்” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிடப்பட்டிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத்தொடர்ந்து கிறிஸ்துவ குழுவினர் சிலர் இலங்கையின் மேற்கு கடற்கரை பகுதியான சிலாவில் உள்ள மசூதிகள் மற்றும் முஸ்லிம் கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இலங்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், வன்முறைச் சம்பவங்கள் பரவாமல் தடுக்க இலங்கையில், ஃபேஸ்புக் , வாட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon