மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

ஐபிஎல்: கடைசிப் பந்தில் கிடைத்த கோப்பை!

ஐபிஎல்: கடைசிப் பந்தில் கிடைத்த கோப்பை!

இரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்துவந்த ஐபிஎல் தொடர் பரபரப்புக்கிடையில் நிறைவடைந்துள்ளது.

எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற த்ரில், டி20 கிரிக்கெட் போட்டிக்கே உரிய சிறப்பம்சங்களில் ஒன்று. அதுவும் உலகின் சிறந்த வீரர்களைச் சமமாகத் தங்கள் அணிகளுக்குள் பங்கிட்டுக்கொண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சுவாரஸ்யத்துக்கு எப்போதும் குறைவிருக்காது.

எட்டு அணிகள் கலந்துகொண்ட தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று (மே 12) ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இரு அணிகளும் தலா மூன்று முறை கோப்பையைக் கைப்பற்றியிருந்ததால் நான்காவது முறையாக எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்தது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஓப்பனிங் இறங்கிய டி காக் வந்த வேகத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 17 பந்துகளில் 29 ரன்களைச் சேர்த்து தாக்கூர் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் ரோஹித் ஷர்மாவும் சூர்யகுமார் யாதவ்வும் தலா 15 ரன்களில் தங்கள் ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். இஷான் கிஷான் 23 ரன்களும் குருணல் பாண்டியா 7 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

பின்னர் வந்த பொல்லார்ட் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 25 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்திக் பாண்டியா 16 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் வந்த இந்த ரன்கள் மும்பை அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதை தங்களது பேட்டிங்கால் வாட்சனும் டு ப்ளஸிஸும் மாற்றிக்காட்டினர்.

வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்த டு ப்ளஸிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனாலும் தொடக்கத்திலேயே ரன் ரேட்டைக் கூட்ட அவரது பங்களிப்பு உதவியது. மறுபுறம் வாட்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இலக்கை விரைவாக எட்டமுடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின்னால் வந்த வீரர்கள் அவருடன் கூட்டணி அமைக்காமல் தங்கள் விக்கெட்டுகளை விரைவாக இழந்து வெளியேறினர்.

ரெய்னா 8 ரன்களிலும், தோனி 2 ரன்களிலும், ராயுடு 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிராவோ தன் பங்குக்கு 15 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதிவரை அதிரடியை விட்டுவிடாத வாட்சன் எதிர்பாராதவிதமாக கடைசி ஓவரில் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 5 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற ஷர்துல் தாக்கூர் 2 ரன்கள் சேர்த்து கடைசி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் மும்பை அணி நான்காவது முறையாகக் கோப்பையை வென்றது. 4 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon