மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 மே 2019

துவிதா: பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணின் கதை!

துவிதா: பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணின் கதை!

திரை தரிசனம்: முகேஷ் சுப்ரமணியம்

ஒரு பிரமாண்டமான ஆலமரத்தின் காட்சி. அந்த மரத்தினுள்ளே ஒரு பேய் குடிகொண்டிருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என வாய்ஸ்-ஓவர் கேட்கிறது. புதுமணப் பெண் ஒருத்தி குண்டும் குழியுமான பாதைகளில் செல்லும் மாட்டு வண்டியின் திரையை விலக்கி எங்கே செல்கிறோம் எனப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

ராஜஸ்தானிலுள்ள தொன்மையானதொரு கிராமத்தில் திருமணம் முடித்த கையோடு மணமகன் (கிருஷண்லால்), மணமகளுடன் (லச்சி) உறவினர்கள் மாட்டு வண்டியில் சென்றுகொண்டிருக்கின்றனர். திருமணம் முடிந்தாலும் இன்னும் முடியாத கணக்கு வழக்குகளை அப்பாவிடம் காட்ட வேண்டி மணமகன் கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறான். வெயிலுக்கு இளைப்பாற மாட்டு வண்டியை ஊருக்கு முன்னேயிருக்கும் அந்த ஆலமரத்தின் நிழலில் நிறுத்துகின்றனர். மரத்திலிருக்கும் பேயானது மணமகளைக் கண்டவுடன் அவளை அடைய நினைக்கிறது. அவளது முகத்திலிருக்கும் பரிதாபம் பேயை மூழ்கடிக்கிறது. அதற்கு முன் அப்படியொரு குழப்பத்தைச் சந்தித்திராத அப்பேய், அப்பாவிதனமான அவளது அழகில் மயக்கமுறுகிறது.

திருமணம் முடிந்த மூன்றாவது நாளில் வணிகரின் மகனான கிருஷண்லால், தான் வியாபாரத்துக்காக தூர தேசம் செல்லப்போவதாகச் சொல்கிறான். தன் தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்து நல்ல மனைவியாக நடந்துகொள், ஐந்து வருடங்கள் கழித்துப் பார்க்கலாம் என லச்சியின் பதிலை எதிர்பார்க்காமல் பயணப்படுகிறான். வழியில் அதே ஆலமரத்தின் அடியிலமர்ந்து இளைப்பாறுகிறான். அவன் சென்ற பின், மரத்திலிருக்கும் பேய் ஒரு வழிபோக்கன் உருவத்தில் சென்று அவனது பயணத்தைப் பற்றி அறிகிறது. பிறகென்ன கிருஷண்லால் உருவத்தைப் பெற்று விடும் பேய், தனது தந்தையிடம் அந்தணரின் வரம் கிடைத்துள்ளது, தினமும் காலை தங்க நாணயம் கிடைக்கும் என ஏமாற்றி, லச்சியின் கணவனாக வாழத் தொடங்குகிறது. ஐந்து வருடங்கள் முடியும் முன், உண்மையான கிருஷண்லால் தன் மனைவி கர்ப்பமாகயிருக்கிறாள் என்பதை அறிந்து ஊருக்கு வருகிறான். ஆனால் பெற்ற தாய் தந்தையே அவனை நம்ப மறுக்கிறார்கள். கிருஷண்லால் உண்மையை எப்படிக் கொண்டுவந்தான் என்பதை சிறு வயதில் கேட்ட ஊர்க்கதை போலச் சீரான திரைமொழியில் சொல்லி அந்த மனிதர்களின் அனுபவத்தில் நம்மைத் திளைக்கவைக்கும் அற்புதமே துவிதா.

ராஜஸ்தானின் பிரபலமான நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான துவிதா, 1973ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை மணி கௌல் இயக்கியிருக்கிறார். ரவி மேனன், ரைசா பதம்ஸி பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நிலப்பிரபுத்துவச் சமுதாயம் மீதான பகடி

சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் நிலப்பிரபுத்துவச் சமுதாயம் மீதான மணி கௌலின் பகடியே துவிதா எனலாம். துவிதாவில் பேய் என்ற கட்டுக்கதையின் மூலம் பொருள்சார் சமூகம் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை மறுகேள்வியின்றி ஏற்றுக்கொள்ள வைக்கும் தந்திரத்தைக் கதையின் போக்கிலேயே வெளிப்படுத்துவது வரலாற்று ரீதியான மறுவிசாரணை. கிருஷண்லாலுக்கும் (பொருள்) பேய்க்குமான (பொருளற்ற) முரணில் லச்சியின் பங்கென்பது எதிர்க்காமல் ஏற்றுக்கொள்வதுதான். “என் கணவர் விட்டுப் போகும்போது, என்னால் அவரை இருக்க வைக்க முடியவில்லை. இப்போது காதலை வெளிப்படுத்தும் இந்தப் பேயையும் என்னால் நிறுத்த முடியவில்லை. என்னை விட்டுச் செல்லும் ஒருவரைத் தடுக்க முடியவில்லை என்றால் மற்றவரை எப்படி நான் மறுக்க முடியும்?” என கணவர் உருவத்தில் பேய் வீட்டுக்கு வந்த இரவில், கேட்கும் லச்சியின் குரல் ராஜஸ்தானின் பாரம்பரிய ஹவேலி சுவர்களுக்குள் மட்டும் ஒலிப்பதல்ல.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், மணி கௌலின் தனித்துவம் நிறைந்த திரைமொழியால் ஒப்பற்ற அனுபவத்தை வழங்குகிறது. இயற்கையான ஒளியமைப்பு (நவ்ரோஸ் காண்டிராக்டர்), ஆசையின் குறியீடாகப் படம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிவப்பு, சட்டகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கையாண்ட மினிமலிஸ்டிக் அணுகுமுறை (ஒளியமைப்பு, இசை, ஒலி, கலையமைப்பு) போன்ற நுட்பமான கதைசொல்லும் முறையினால் இன்றளவும் துவிதா கொண்டாடப்படுகிறது.

ராபர்ட் பிரஸ்ஸான் (பிக் பாக்கெட், அவ் ஹஸர்ட் பல்தாஸர்) பாணியில் நடிகர்களை மாடல்கள் போல இந்தப் படத்தில் பயன்படுத்தியிருப்பார் மணி கௌல். கட்டமைக்கப்பட்ட அகநிலையாக (subjective) இல்லாமல் சினிமாவின் இயல் மொழியாகக் கருதப்படும் புறநிலை (objective) வழியாக கெளல் துவிதாவை அணுகியிருப்பார். பார்வையாளருக்குப் படைப்பாளன் குறுக்கீடாக நில்லாமல் படைப்பின் உளவியல் மற்றும் வரலாற்றுக் கூறுகளை அளிப்பதன் மூலம் பார்வையாளன் சஹ்ருதயன் (படைப்பாளிக்கு ஒப்பான மனதை உடைய) ஆகிறான்.

இன்றளவும் கிளாஸிக்காகக் கொண்டாடப்படும் துவிதா இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பொக்கிஷங்களில் ஒன்று.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

திங்கள் 13 மே 2019