மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

இது யாருடைய செய்வினை?

இது யாருடைய செய்வினை?

ஒரு சொல் கேளீரோ! – 5: அரவிந்தன்

ஒருமை – பன்மையைக் காட்டிலும் செய்வினை – செயப்பாட்டு வினைக் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டியது முக்கியமானது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் இதனால் பொருள் குழப்பம் அதிகம் ஏற்படும்.

அவர் படம் வரைந்தார்

படம் அவரால் வரையப்பட்டது

இத்தகைய சிறிய வாக்கியங்களில் செய்வினை, செயப்பாட்டு வினைக் குழப்பங்கள் வருவதில்லை. ஆனால், நீளமான வாக்கியங்களில் குழப்பம் ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டாக,

குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்கள்

என்று சிலர் எழுதுகிறார்கள். வாக்கியம் எப்படித் தொடங்கப்படுகிறதோ அதற்கேற்ப அது முடிக்கப்பட வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை என்று எழுதினால் கைதுசெய்தார் அல்லது கைதுசெய்தார்கள் என்று செய்வினையில்தான் எழுத வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்று வாக்கியத்தைத் தொடங்கினால் கைதுசெய்யப்பட்டார்கள் என்று செயப்பாட்டு வினையில் முடிக்க வேண்டும்.

இங்கும் எழுவாய்தான் முக்கியம்.

இந்த எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

அவனைத் தாக்கினார்கள், அவன் தாக்கப்பட்டான் -

அவன் அல்லது அவனை என்பதை வைத்து செய்வினை / செயப்பாட்டு வினை முடிவு செய்யப்படுகிறது.

சிறிய வாக்கியங்களில் இது எளிதாகப் புரிந்துவிடும். பெரிய வாக்கியங்களில் குழப்பம் ஏற்படும். அப்போது யார் அல்லது யாரை என்பதைக் கவனித்தால் பிரச்சினை வராது. எனவே பெரிய வாக்கியங்களில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

செயப்பாட்டு வினை ஆங்கிலத்தில் இயல்பாகப் புழங்கும். ஆனால், தமிழில் அத்தனை இயல்பாகப் புழங்காது.

He is told, I am informed, it has been learnt that…, 10 people have reportedly gone missing…

இதுபோன்ற செயப்பாட்டு வினைப் பயன்பாடுகளை ஆங்கிலத்தில் அதிகம் காணலாம். Unearthed, Exposed, captured, reportedly, allegedly என்று பல இடங்களிலும் செயப்பாட்டு வினையின் பயன்பாடுகள் உள்ளன.

தமிழுக்கு இது அவ்வளவு இயல்பானது அல்ல.

நான் சொல்லப்பட்டேன்

அவருக்குத் தெரிவிக்கப்பட்டது

அது அறியப்பட்டபடி

- என்றெல்லாம் எழுதுவது இயல்பான தமிழ் நடை அல்ல. எனவே இத்தகைய நடையைக் கூடியவரை தவிர்க்கலாம்.

மேலாளர் என்னிடம் சொன்னார்

அவரிடம் தெரிவித்தார்

என்று தெரியவந்தது

- என்று எழுதலாம்.

அம்பலப்படுத்தப்பட்டது, கண்டுபிடிக்கப்பட்டது, கைப்பற்றப்பட்டது ஆகிய சொற்களில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், அம்பலப்படுத்தினார், கைப்பற்றினார்கள், கண்டுபிடிப்பு என்று எழுதுவது, தமிழின் இயல்புக்கு நெருக்கமாக இருக்கும்.

சில இடங்களில் செயப்பாட்டு வினை பொருத்தமாகவும் இயல்பாகவும் இருக்கும் அத்தகைய இடங்களில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு:

நீதிமன்ற உத்தரவு மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகின்றன

வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டும் மக்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தார்கள்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று)

தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்

மொழியில் இருக்க வேண்டிய நெகிழ்வு!

ஒருமை – பன்மை மயக்கம் எப்படி ஏற்படுகிறது?

ஒருமை – பன்மை: மேலும் சில விதிகள்!

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon