மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

தேவிபாரதி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு இன்னும் பதினோரு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புகளைப் பற்றி எதிர்க்கட்சிகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. வரும் மே 21ஆம் தேதி புதுதில்லியில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனைக் கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் வேறு யாரையும்விட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்க முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தாவைச் சந்திப்பதற்காக கொல்கத்தாவுக்குச் சென்ற சந்திரபாபு நாயுடு, திருணமூல் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று அவரை வங்கச் சிங்கம் எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். மே 23ஆம் தேதிக்குப் பிறகு மம்தா கிங் மேக்கராக உருவெடுப்பார் எனப் புகழ்ந்திருக்கும் நாயுடு கிங் யாரென்பதைச் சொல்லவில்லை.

பிரதமர் பதவிக்கான பந்தயம்

மேற்கு வங்கத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின்போது மம்தா பிரதமராவதற்குத் தகுதியானவர் என்பதுபோன்ற சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டுப் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. உத்தரப் பிரதேசத்திற்கு வெளியேயும் செல்வாக்குப் பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குறித்தும் அதேபோன்ற சொல்லாடல்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவரது கூட்டாளியான அகிலேஷ் யாதவ் பிரதமராவதற்கு முற்றிலும் தகுதியானவர் மாயாவதி எனச் சொல்லியிருக்கிறார்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைத் தொடங்கியிருப்பதைப் பார்த்தால் அவரும் கிரீடம் சூட்டிக்கொள்ளத் தயாராகிக்கொண்டிருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. தேர்தல் களத்தில் நிற்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முலாயம் சிங் யாதவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்ற தலைவர்கள் பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து ஒதுங்கியிருப்பார்கள் எனக் கற்பனை செய்துகொண்டாலும்கூட போட்டியாளர்களின் பட்டியல் நீண்டதாகவே இருக்கும்.

ராகுல் தந்த மாற்றம்

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்து ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்த வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் மாநிலக் கட்சிகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. பாஜகவுக்கு எதிரான அரசுக்குத் தலைமையேற்கும் வாய்ப்பு மற்ற யாரையும் விட காங்கிரஸுக்கே அதிகம். தலைமைப் பொறுப்பை ஏற்ற இரண்டாண்டுகளில் காங்கிரஸின் மீதான நம்பிக்கையை உயர்த்துவதில் ராகுல் காந்தி வெகுதூரம் முன்னேறியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. பாஜகவின் ஒற்றை இந்தியா பற்றிய கனவுகளுக்கு வலுவான எதிர்ப்பை உருவாக்குவதில் ராகுல் காந்தியின் பங்களிப்பு அதிகம். கடந்த ஐந்தாண்டுகளில் மோடி - அமித் ஷா கூட்டணி நாட்டின் மதசார்பின்மைக்கும் பன்முக அடையாளத்துக்கும் ஏற்படுத்தியுள்ள சேதாரத்தைச் சரி செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைகள் இளம் தலைமுறையினரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றன என்பதிலும் சந்தேகமில்லை.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் மீது நிலவிய வெறுப்பை ராகுலால் மட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் சரிவுகளிலிருந்து மீண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, மோடிக்கு எதிரான வலுவான கூட்டணியை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் வலுவான கூட்டணி ஒன்றை அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்குத் தயாராகிக்கொண்டிருந்தார் ராகுல். ஆனால், தமிழகம் போன்ற ஓரிரு மாநிலங்களைத் தவிர வேறு எதுவும் ராகுல் காந்திக்குக் கைகொடுக்கவில்லை. மோடி - அமித் ஷா கூட்டணியின் அடிப்படைவாத அரசியலுக்கெதிராகச் சமரசமற்ற போராட்டங்களை நடத்திவரும் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்கத் தவறியிருப்பதன் மூலம் காங்கிரஸ் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் அபஸ்வரங்கள்

இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதப்படும் கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணிகளை அமைப்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கிறது. மோடி - அமித் ஷா தலைமையிலான பாஜகவை வீழ்த்துவதைத் தனது அரசியல் செயல்திட்டமாகக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு ஒன்றைச் செய்துகொள்ளாததைக் காட்டிலும் ராகுல் காந்தி கேரளத்தின் வயநாடு தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிடுவது மோசமானது.

மேற்கு வங்கத்தில் தனது அரசியல் எதிரியான மம்தாவை வீழ்த்துவது மோடியை வீழ்த்துவதைவிட இடதுசாரிகளுக்கு முக்கியமானதாக இருக்கிறது. மம்தாவை வீழ்த்துவதற்கு இடதுசாரிகள் பாஜகவை மறைமுகமாவும் நேரடியாகவும் ஆதரிப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதே கதைதான் கர்நாடகத்திலும். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி, இரு கட்சிகளின் தொண்டர்களுக்கிடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதற்குத் துணை புரியவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

புதுதில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளை ஆளும் ஆம் ஆத்மி கட்சியுடன் பகிர்ந்துகொள்வதில் அக்கறை காட்டிய காங்கிரஸ் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒன்றிரண்டை ஆம் ஆத்மிக்கு ஒதுக்க மறுத்ததால் தில்லி, காங்கிரஸையும் ஆம் ஆத்மியையும் கைவிட்டுவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் உத்தரப் பிரதேசத்தின் நிலை மற்ற எல்லாவற்றையும்விட மோசம். மோடி - அமித் ஷா தலைமையிலான பாஜகவை மூர்க்கமாக எதிர்க்கும் மம்தா, அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பைக் கோட்டைவிட்டுள்ள காங்கிரஸ், மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறுவதைப் பற்றிக் கனவுகூடக் காண முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழகம் தரும் ஆறுதல்

காங்கிரஸுக்கு ஆறுதலளிக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவித்துவரும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளாராக முன்னிறுத்தியிருப்பதோடு இடதுசாரிகளையும் தங்களது நட்பு வட்டத்தில் இணைத்திருக்கின்றன. மற்ற மாநிலங்களில் மோடிக்கு எதிரான அணியை உருவாக்குவதில் இருந்த சவால்களைக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகவோ, காங்கிரஸோ எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை. ஈழப் பிரச்சினையில் காங்கிரஸோடு கடுமையாக முரண்பட்ட மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள், காங்கிரஸோடு சேர்ந்து மோடியை வீழ்த்துவதற்கு மூர்க்கமாகக் களமிறங்கியிருக்கின்றன. கேரளத்தில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு எதிராக ராகுல் காந்தி நிற்பதால் உருவான கசப்பை மார்க்சிஸ்டுகள் உடனடியாக மறந்துவிட்டார்கள்.

கடந்த இரண்டாண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு மக்கள் போராட்டங்களில் இக்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கின்றன. தமிழக மக்களின் வாழ்வாதாரம், உரிமைகள் சார்ந்த இப்போராட்டங்களுக்கு திமுகவும் காங்கிரஸும் தம் ஆதரவை அளித்ததே தற்போது ஏற்பட்டிருக்கும் கூட்டணிக்கு அடித்தளம். வேறு எங்குமே இதுபோன்ற ஒருங்கிணைப்பை காங்கிரஸால் ஏற்படுத்த முடியவில்லை.

இவ்வளவுக்குமிடையேதான் மே 21ஆம் தேதி நடைபெறவிருக்கிற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஒன்று உருவாக வேண்டியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கும் கிங் மேக்கர்களுக்கும் கிங்குகளுக்கும் அரசியல் ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் இந்தக் கூட்டம் முக்கியமானது, சவாலானது.

அந்தச் சவாலை எதிர்கொள்வதில் காட்டும் விவேகத்திலும் முதிர்ச்சியிலும்தாம் அவர்களது அரசியல் எதிர்காலம் அடங்கியுள்ளது.

அவர்களுடையதும் மோடியினுடையதும்.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

மோடி அரசைக் கலைக்க நினைத்த வாஜ்பாய்: யஷ்வந்த்

.

ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!

.

.

திலகவதி கொலை: ராமதாஸுக்கு திருமாவளவன் பதில்!

.

இப்படியும் சில ரவுடிகள்! -தேனி அதிர்ச்சி!

.

ஞாயிறு, 12 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon