முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்துள்ளது.
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊர்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்திருந்தார். பிரச்சாரம் 10 மணியுடன் முடிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், வெளியூரிலிருந்து சென்று திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பணியாற்றிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என பலரும் விடுமுறையைக் கழிப்பதற்காக சென்னை உள்ளிட்ட தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், நேற்றிரவு மதுரையிலேயே தங்கிவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பணிகள் தொடர்பாக இன்று (மே 12) காலை திடீர் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்த தகவல் சொந்த ஊர்களுக்கு சென்ற நிர்வாகிகளுக்கு போனில் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், இரவோடு இரவாக மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருப்பரங்குன்றத்தில் அமமுக தேர்தல் பணிகள் அதிகமாக இருப்பதாக தனது கவனத்துக்கு வந்துள்ளதாகவும், அதனைவிட கூடுதல் உழைப்பைக் கொடுத்து கண்டிப்பாக இங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். முதல்வருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே திருப்பரங்குன்றத்தில் வேட்பாளராக நிறுத்த பன்னீர்செல்வம் தரப்பு ஒருவரையும், உதயகுமார் ஒருவரையும் பரிந்துரை செய்த நிலையில், இரு தரப்புக்கும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க பொதுவான ஒருவரான முனியாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், தேர்தல் வேலைகளில் இரு தரப்பினரும் சுணக்கம் காட்டுவதாக ஒரு தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு சென்றிருக்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை அழைத்துப் பேசிய முதல்வர், ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றியை தேடித் தாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
.
.
மேலும் படிக்க
.
.
.
.
.
.
.