நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசியது சரிதான் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
நான்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்துவருகிறது. நான்கு தொகுதிகளிலும் மையமிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (மே 11) பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொட்டலூரணி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தினகரன், “அதிமுக மூடப்போகிற கம்பெனி. தொண்டர்கள் எல்லாம் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். டெண்டர் பார்ட்டிகள் மட்டும்தான் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள். சுந்தர்ராஜன் இடைத் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்கிறேன் என்று சொன்னால் அவருக்கு 100 கோடி ரூபாய் தர தயாராக இருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
பன்னீர்செல்வம் பிரச்சாரத்தின்போது பெண்களெல்லாம் கண்டுகொள்ளாமல் நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் அம்மா, தாயே என்று கெஞ்சுகிறார் பன்னீர்செல்வம் என்று விமர்சித்தவர், “தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுடன் சேர்ந்து சதிசெய்வதாகக் கூறுகிறார்கள். அவர் வெளிப்படையாகத்தான் கூறுகிறார். அனைவரும் சேர்ந்துதானே ஆட்சியைக் கவிழ்க்க முடியும். எங்களிடம் தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இடைத் தேர்தலில் 22 தொகுதிகளிலும் அமமுக வெற்றிபெற்றால், திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்துதானே தோற்கடிக்க முடியும். துரோகத்தை ஒழிக்க அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேருவார்கள். இதில் என்ன கூட்டணி?” என்று கேள்வி எழுப்பினார்.
பன்னீர்செல்வம் பால் வியாபாரம் செய்துகொண்டிருந்தவர். தற்போது அவருடைய மகன் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுக்கிறார். என்ன மாந்தோப்பை விற்றா கொடுக்கிறார்? அங்கு தங்க தமிழ்ச்செல்வன்தான் வெற்றிபெறுவார். தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்க்கொழுப்பு என்கிற வாரணாசி பன்னீர்செல்வம் வாயடைத்துப் பேச வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க
.
.
.
.
.
.
.