மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 மே 2019

ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!

ஆகாஷ்- திலகவதி:  என்ன நடந்தது?  என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு சாதிப் பதற்றப் பொறி விழுந்திருக்கிறது. காதலித்த பெண்ணையே காதலன் வெட்டிக் கொன்ற சம்பவம் மனித நேயமுள்ளவர்களை கவலைக்கு உள்ளாக்க, கடலூர் மாவட்டத்திலோ இந்த கொலையால் சாதிப் பதற்றம் உயிர்த்து எழுந்துள்ளது.

பொதுவாகவே வட மாவட்டங்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தற்கொலை செய்துகொண்டாலோ, கொல்லப்பட்டாலோ அதற்கு வன்னியர் சமூகத்தினர்தான் (பாமக) காரணம் என்றும்... வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டால் அல்லது தற்கொலை செய்துகொண்டால் தலித்துகள்தான் காரணம் (விசிக ) என்றும் கொடிபிடித்து கோஷம் போடுவது தொடர்கதையாகிவருகிறது. இதுபோல் பல சம்பவங்கள் நடைபெற்றுவருவதால் காவல்துறை அதிகாரிகள் நொந்து நூலாகிப்போகிறார்கள்.

இந்த நிலையில்தான், கடந்த மே 8 ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பலங்குறிச்சி கிராமத்தில் நடந்த ஒரு கொலை மறுபடியும் சாதிப் பதற்றத்தை விதைத்துள்ளது. திலகவதி என்ற 19 வயதே ஆன இளம்பெண்ணை, ஆகாஷ் என்ற 19 வயது இளைஞன் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார். திலகவதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர், கொலை செய்த ஆகாஷ் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வடமாவட்டங்களில் பதற்றக் காய்ச்சல் அடிக்கத் தொடங்கிவிட்டது.

இந்தக் கொலையைக் கையிலெடுத்து உடனடியாகக் களமிறங்கிவிட்டது பாமக. மே 9 ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,

“கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் காதலிக்க மறுத்ததற்காக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். காதலிக்க மறுத்ததற்காக அப்பாவிப் பெண்ணை கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது; கடுமையாக தண்டிக்கத்தக்கது.

திலகவதி எந்தப் பாவமும் செய்யவில்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் படித்தால் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் செய்வதையும், அதையே முதலீடாகக் கொண்டு பணம் பறிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் கும்பலைச் சேர்ந்த ஆகாஷ் தம்மை காதலித்தே தீர வேண்டும் என்று திலகவதியை கட்டாயப்படுத்தி இருக்கிறான். அதற்கு திலகவதி மறுத்து விட்டதால், அவரை வெறித்தனமாக கொலை செய்திருக்கிறான். இத்தகைய குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கும்பல் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பது தான் இத்தகைய குற்றங்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றன.

பெண்களை படிக்க வைக்க முடியாமலும், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாமலும் தடுக்கும் வகையில் நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கடுமையான சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் ராமதாஸ்.

அதாவது ஆகாஷை காதலிக்க மறுத்ததாலேயே திலகவதி கொல்லப்பட்டதாகவும், இதற்குப் பின்னால் விடுதலை சிறுத்தைகள் இருப்பதாகவும் கொலை நடந்த அடுத்த நாளே ராமதாஸ் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்ல ராமதாஸ் அறிக்கை வந்த மறுநாள் அதாவது மே 10 ஆம் தேதி பாமக தலைவர் ஜி.கே.மணி அந்த கருவேப்பிலங்குறிச்சி கிராமத்துக்கே சென்றுவிட்டார்.

ஜி.கே.மணி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று திலகவதி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, திலகவதியின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார். பின் கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் ஜி.கே.மணி முன்னிலையில் சுமார் 500 பேர் திரண்டு, திலகவதிக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கிருந்த கூட்டம் சாலையில் உட்கார்ந்ததால் மறியலாக மாறியது, உடனே ஜி.கே.மணி மறியலில் ஈடுபட்டவர்களை கைவிடச்சொன்னார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, “இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்குது. நாங்க கண்ணீர் வடிக்கிறோம். இதையெல்லாம் தட்டிக்கேக்குற ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்தான். பாமக மட்டும்தான் இதைப் பத்தி பேசுது. மத்த யாரும் பேசமாட்டேங்குறாங்க. தமிழ்நாட்ல அனைத்து சமுதாய பெண்களுக்கும் பாதுகாப்பு வேணும்னு கேக்குறோம். எல்லா மாவட்டங்கள்லயும், புதுசா உருவான கள்ளக்குறிச்சி மாவட்டத்துல உட்பட எல்லா மாவட்டத்துலயும் இது நடக்குது. காரணம் யாருன்னா ஒரே ஒரு கும்பல்தான். இதுக்கு சில அரசியல் கட்சிகள் தூபம் போடறாங்க, பின்னால் இருந்து ஆதரவு அளிக்கிறாங்க.

இதுக்கு நீதி வேணும், நியாயம் வேணும். திலகவதிக்கு வீர வணக்கம் செலுத்தியிருக்கிறோம். திலகவதி படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் கடுமையான தண்டனை கொடுக்கணும். போக்சோ சட்டம், குண்டர் சட்டம்னு எது போட்டாலும் வெளியே வந்துடறாங்க. அதனால கடுமையா நடவடிக்கை எடுக்கணும். அந்த குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் அரசு இழப்பீடு கொடுக்கணும். இப்படி ஒரு சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது” என்று கூறினார் ஜி.கே.மணி.

ராமதாஸ், ஜி.கே.மணி சொல்வது போல இது ஒரு தலை காதல் கொலையா? என்ன பின்னணி? களத்தில் இறங்கி விசாரித்தோம்.

டி.பவழங்குடியை சொந்த ஊராகக் கொண்ட சுந்தரமூர்த்தி கருவேப்பிலங்குறிச்சியில் செட்டில் ஆகிவிட்டார். அவரது மகள் திலகவதி. வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த ஊரில் இருந்து சுமார் 750 மீட்டர் தூரத்தில் உள்ள பேரலையூர் கிராமத்தில் வசிக்கும் அன்பழகன் மகன் ஆகாஷ் வயது 19. தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

ஆகாஷ், திலகவதி இருவரும் கருவேப்பிலங்குறிச்சி அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் இருந்தே ஒன்றாய் படித்தவர்கள். அதனால் நெருங்கிய நட்பாகப் பழகிவந்தார்கள். மேல் நிலை வகுப்பு முடித்து திலகவதி விருத்தாசலம் அருகில் எருமனூர் சி.எஸ்.எம். கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். ஆகாஷ் திருச்சி பெரியார் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்துவந்தார். திருச்சியில் இருந்தாலும் அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார் ஆகாஷ். அண்மையில் மாணவர்களை ரேக்கிங் செய்த புகாரின்பேரில் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சில நாட்களாக கருவேப்பலங்குறிச்சியிலே இருந்தார் ஆகாஷ்.

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

“ஆகாஷும், திலகவதியும் நெருக்கமான காதலர்கள் என்பது ஊருக்கும் பரவலாகத் தெரியும் என்கிறார்கள் அக்கம்பக்கத்தில். மே 5 ஆம் தேதியில் இருந்து இருவரும் போனில் பேசி சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் 8 ஆம் தேதி, கல்லூரிக்கு போய்விட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் திலகவதி. திலகவதியிடம் கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய ஆகாஷ் மாலை ஐந்து மணியளவில் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இருவரும் உரிமையோடு சண்டை போட்டுள்ளார்கள். திலகவதி, ‘என்னை எப்போ கல்யாணம் செஞ்சுக்கப் போறே’ என்று திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார். ஆகாஷோ அதற்கு சரியாக பதில் சொல்லவில்லை.இந்த சண்டைதான் செல்போனிலேயே அவர்களுக்கு இடையே நடந்திருக்கிறது. அதன் பிறகு நேரில் வீட்டுக்குச் சென்றபோதும், ‘என்னை எப்போ கல்யாணம் செஞ்சுக்கப் போறே?’ என்றே திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார் திலகவதி.இந்த பிரச்னையால் அவர் ஆகாஷை அடித்திருக்கிறார். இந்த வாக்குவாதம், சண்டையின் முடிவில்தான் அந்த இளம்பெண்ணை கத்தியால் வயிறு உட்பட மூன்று இடங்களில் குத்திவிட்டு ஓடிவிட்டார் ஆகாஷ்.

ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய திலகவதி தனது கைப்பேசியிலிருந்து மாமாவைத் தொடர்புகொண்டு தகவல் சொல்லிக் காப்பாற்ற உதவிகேட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் சந்தேகப்பட்டு வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது திலகவதி ரத்தவெள்ளத்தில் கடந்தவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்” என்ற போலீசார் தொடர்ந்து நம்மிடம் பேசினார்கள்.

“கருவேப்பங்குறிச்சி போலீஸாருடன், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது ஸ்பாட்டுக்கு சென்றனர். திலகவதியின் செல்போன், நோட் புத்தகங்களை ஆராய்ந்துள்ளார்கள். சில நோட்டு புத்தகங்களில் ஆகாஷ் என்றும், சில நோட்டில் ஹார்ட்டின் படம் போட்டு அதில் AT என்று அதாவது ஆகாஷ்-திலகவதி என எழுதி வைத்திருந்ததை போலீஸார் கைப்பற்றினர்.

திலகவதியின் தோழி ஒருவரிடம் போலீஸ் விசாரித்தபோதுதான், திலகவதிக்கு காதலன் ஆகாஷ் என்பவன் இருக்கிறான் என்பதும் அவன் பேரலையூர் கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்திருக்கிறது. கொலை நடந்த மூன்று மணி நேரத்துக்குள் ஆகாஷ் வீட்டுக்கு இரவு 9.30 மணிக்குச் சென்றது போலீஸ். எதுவுமே நடக்காததுபோல வீட்டில் இருந்தவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்று விசாரிக்க ஆரம்பித்தனர் போலீஸார்” என்றனர்.

. போலீஸாரிடம் ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தில்,

“ நானும் அதுவும் (திலகவதி) ஸ்கூல் படிக்கும்போதிலிருந்து நட்பாக இருந்து வந்தோம். அப்புறம் அது காதலாக மாறியது. இடையில் இருவரும் சிறு மனக் கஷ்டத்தால் பேசாமல் இருந்தோம். பிறகு நானும் போன்போட்டுக் கேட்பேன். அதுவும் போன்போட்டு பேசும். ஏன் பேசவில்லை வரவில்லை என்று கோபமாகக் கேட்கும்.

கல்லூரிக்கு போயிட்டு வந்ததும் நான் வீட்டுக்கு போனேன். ‘ஏண்டா உனக்கு நண்பர்கள்தான் முக்கியமா? அவங்களோடதான் சுத்துவியா? என்னிடம் பேசமாட்டியா? என்னைப் பிடிக்கவில்லையா என்று கேட்டு அடித்தது. அதன் பிறகு அதுவே அடித்த இடத்தில் தடவிக்கொடுத்து ஆறுதல் சொல்லியது. மீண்டும் இருவருக்கும் சண்டை வந்தது கோபத்தில் இடுப்பிலிருந்த சூரக் கத்தியால் குத்திட்டு தப்பித்துவிட்டேன் ”என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளான். அந்தக் கத்தியை தன் வீட்டில் இருந்தே எடுத்து வந்ததாக ஆகாஷ் சொல்ல, அதை பொய் என போலீசார் கூற பின் கத்தியை திலகவதி வீட்டில் இருந்தே எடுத்ததாக மாற்றிச் சொல்லுகிறான் ஆகாஷ்.

அந்த நேரத்தில் சென்னை ஆலந்தூரிலிருந்து கருவேப்பலங்குறிச்சிக்கு அக்கா வீட்டுக்குப் பேருந்தில் வந்த அஜித் என்ற இளைஞர் பேருந்தைவிட்டு இறங்கிவந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி.குணசேகரனிடம், “சார் பஸ், கார் நீண்டதூரம் நிற்கிறது. இவ்வளவு போலீஸ் இருக்கிறீங்களே? பஸ்க்கு வழிவிடச்சொல்லுங்க” என்று கேட்டுள்ளார். மறியலில் ஈடுபட்டிருந்த கூட்டத்தினர் அந்த அஜித்தை நையப் புடைக்க, பாதுகாப்பிலிருந்த போலீஸார் அஜித்தைக் காப்பாற்றி விசாரித்திருக்கிறார்கள். தான் ஒரு ஆங்கில பத்திரிகை நிருபர் என்று சொல்ல, உண்மையா என்று விசாரித்தபோதுதான் அவர் நிருபர் இல்லை என்பதும், பயந்து போய் பொய் சொல்லிவிட்டார் என்றும் தெரிந்தது. கூடவே அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் போலீசாருக்குத் தெரிந்தது. அங்கே மீண்டும் ஏதேனும் பிரச்சினை வெடித்துவிடக் கூடாது என்று கவனமாக செயல்பட்டு அஜீத்தை அங்கிருந்து அனுப்பினர் போலீஸார்.

எப்படியோ ஒரு வழியாக போராட்டக் காரர்களுடன் பேசி திலகவதியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய அனுப்பிவிட்டார்கள்.

இந்த சம்பவம் பற்றி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஐ.பி.எஸ்.சிடம் பேசினோம்.

”மாணவியைக் கொலை செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றவாளியைக் கைது செய்தாச்சு. சட்டத்திற்கு முன் நிறுத்தி கடுமையான தண்டனையை வாங்கிக் கொடுப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதேநேரம், இதை சாதிப் பிரச்சினையாக உருவாக்குவதுதான் வேதனையாக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் சாதிப் பிரச்சினையால் வழக்கு வம்பில் சிக்கிப் பல படித்த இளைஞர்கள் அரசு வேலைக்குப் போகமுடியாமலும் தனியார் கம்பெனிக்குக்கூட போகமுடியாமல் தவிப்பதும் பரிதாபமாக உள்ளது.

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல கவுன்சிலிங் கொடுக்கவேண்டும். இரு சமூகத்திற்கும் மோதல் உருவாகுவதுபோல் சிலர் ஈடுபடுவது வேதனையாக உள்ளது. நல்ல கனவோடு பள்ளியில் படிக்கும் மாணவர்களும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் தேவையில்லாமல் வாய்வார்த்தைகளால் சகிப்புத் தன்மையில்லாமல் சாதி மோதலாக உருவெடுத்து, வழக்கில் சிக்கி சிறைக்குப் போகும் அவலம் தொடரக் கூடாது” என்று வேதனைப்பட்டார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன்.

ஆகாஷ்- திலகவதி ஆகிய இருவரது குடும்பத்தினரும் மிக எளிய அடித்தட்டு வர்க்கத்தினர்தான்.

தனிப்பட்ட ஒரு மாணவனுக்கும் மாணவிக்குமான பிரச்சினையை சாதிப் பிரச்சினையாக்கி அதில் அரசியல் குளிர்காயம் போக்கு மாற வேண்டும். வட மாவட்டங்களில் ஆளுமையாக இருக்கும் முக்கியமான தலைவர்கள் உட்கார்ந்து பேசி அமைதிக்கான இணக்கத்தை உருவாக்கவேண்டியதே இப்போதைய தேவை.

-எம்.பி.காசி

.

.

மேலும் படிக்க

.

அமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்!

.

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- எடப்பாடி: சமரச தூதர் யார்?

.

.

காங்கிரஸுக்கு தூதுவிடும் தெலங்கானா முதல்வர்!

.

சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி

.

தேனி விவகாரம்: பன்னீர் பதில்!

.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி 10 மே 2019