மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 25 மே 2020

ரஞ்சன் கோகாய்: குற்றச்சாட்டும் விசாரணை நடைமுறையும்

ரஞ்சன் கோகாய்: குற்றச்சாட்டும் விசாரணை நடைமுறையும்

பெருந்தேவி

MeToo இயக்கத்தின் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், பல்வேறு துறைகளில் பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை தைரியமாக எடுத்துரைக்க முனைந்திருக்கும் இந்நேரத்தில், “due process” (விசாரணைக்கான உரிய நடைமுறை) என்பது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

அமெரிக்க சட்டக் கல்லூரி மாணவி ரயா சர்க்கார் கல்வியாளர்கள் என்ற போர்வையில் மாணவிகளை பாலியல்ரீதியாகச் சுரண்டிய பேராசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சமூக வலைதளத்தில் அளித்த பட்டியல் (LoSHA (List of Sexual Harassment Accused)) என்பதே நம் நாட்டைப் பொறுத்தவரை MeToo இயக்கத்தின் விதைத் தருணம். ரயா LoSHAவை முன்வைத்து மாணவிகளுக்காகப் பேசியபோது சாதிப் படிநிலை என்பது எந்த அளவுக்கு அத்துமீறல் செய்ததாகச் சொல்லப்பட்ட பேராசிரியர்களுக்குத் துணையாக இருக்கிறது என்பதையும் தன் முகநூல் பக்கத்திலும் நேர்காணல்களிலும் குறிப்பிட்டிருந்தார். ரயாவின் பட்டியலை விமர்சித்த பெண்ணியர்களின் குற்றச்சாட்டு ரயா “due process” என்பதை மதிக்கவில்லை என்பதாகவே பெரும்பாலும் இருந்தது.

அக்டோபர் 24ஆம் தேதி இந்தப் பட்டியல் பகிரப்பட்ட சில மணி நேரங்களுக்குள், நன்கு அறியப்பட்ட பெண்ணியக் கல்வியலாளர்கள் Kafila என்ற இணையப் பத்திரிகையில், இந்தப் பட்டியலைத் திரும்ப வாங்கக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். கல்விப் புலம் சார்ந்த அந்த ஆண்களைப் பெயர் சொல்லி அவமானத்தடுத்தலுக்குப் (naming and shaming) பதிலாக, பட்டியலில் சுட்டப்பட்ட “குற்றச்சாட்டுகளை” அந்தந்தக் கல்வி நிறுவனங்கள் சார்ந்த “due process” வாயிலாக அணுக வேண்டும் என்று கோரினர். ஏதோ தாண்டக் கூடாத லட்சுமணன் கோடு ஒன்றை அவர் தாண்டியதைப் போலப் பல பெண்ணியவாதிகள் புருவம் உயர்த்தினர்.

வரலாற்றுச் சூழலின் பின்னணி

ரயாவின் பட்டியல் உருவாக்கம் பற்றி எழுதும் சமூகவியல் பேராசிரியர் கீதா சாவ்தா, பிரபல அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீனின் பாலியல் துன்புறுத்தலைப் பற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படத் துறை சார்ந்த பெண் தொழிலாளிகள் வெளிப்படையாக விமர்சிக்க முன்வந்த வரலாற்றுச் சூழலின் பின்னணியில் அதை வைக்கிறார். முன்னர் டரனா புர்கே முன்னெடுத்த MeToo இயக்கம் பொதுவெளியில் பெரிய உத்வேகத்தைப் பெற்ற தருணமாக இத்தருணம் இருந்தது.

ஹார்வே வெய்ன்ஸ்டீனின் விவகாரத்தைப் பற்றிய விமர்சனங்கள் ஊடகத்தில் பற்றி எரிந்து பரவிக்கொண்டிருந்தபோது, ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய இயல் துறைப் பேராசிரியரான கிறிஸ்டின் ஃபேர், புகழ்பெற்ற விளிம்புநிலை வரலாற்றுப் பேராசிரியரான தீபேஷ் சக்ரவர்த்தியின் பாலியல் அத்துமீறல்களைக் குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினார். பொதுவாகவே “மேற்கின்” கல்விப் புலத்தில் செயல்படும் பெண் வெறுப்பையும், பாலியல் துன்புறுத்தலையும் விவாதித்த அக்கட்டுரை Huffington Post நாளிதழில் வெளியானது. வெளியான பின் அக்கட்டுரை நீக்கப்பட்டது. அவ்வாறு அது நீக்கப்பட்டதால், ரயா எழுபத்திரண்டு கல்விப் புலப் பேராசிரியர்களின் பெயர்களைத் தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கலாம் என எழுதுகிறார் சாவ்தா. பெயர்களை வெளியிடுதல், அதன் மூலம் அவமானப்படுத்துதல் என்பவற்றோடு மட்டுமன்றி, கல்விப் புலத்தில் பாலியல் இரை வேட்டையாடுபவர்களை அடையாளப்படுத்தி மாணவர்களைத் தற்காத்துக்கொள்ள வைக்கும் விதமாகப் பட்டியலை ரயா வெளியிட்டார். ரயாவே அத்தகைய நோக்கத்தை வெளிப்படுத்தியதையும் சாவ்தா குறிப்பிட்டிருக்கிறார்.

நமது ஊரில் ”due process” என்பதை நடைமுறைப்படுத்தும் விதமாக, பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க, பணியிடங்களில், கல்லூரிகளில் ICC எனப்படும் Internal Complaints Committee என்ற ஒன்றின் இருப்பை, செயல்பாட்டை நம்புகிறோம். இதன் சுருக்கமான வரலாற்றைப் பார்த்தால்,1997ஆம் ஆண்டில் விசாகா தீர்ப்பின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் தரப்பட்ட நியதிகளின்படி, பெண்கள் பணிசெய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்கப் பணியிடங்களில் விசாரணைக் குழு அமைக்க வழிசெய்யப்பட்டு, பல இடங்களில் அவை அமைக்கவும்பட்டன. பாலியல் தொல்லைகளைக் களைந்து, சமத்துவத்தை உறுதி செய்யும் விதத்தில் 2013ஆம் ஆண்டு அரசின் சட்டமும் (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act) நடைமுறைக்கு வந்தன. இவை குறித்த விரிவான தகவல்கள் நாளிதழ்களில் பதிவாகியுள்ளன.

இதன்படி, ஏற்கெனவே இருந்த கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டன, அல்லது இத்தகைய கமிட்டிகளின் இருப்பு உறுதிசெய்யப்பட்டது. ICC கமிட்டிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க குறிப்பிட்ட வழிமுறைகள் உண்டு. நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் பெண் ஊழியரை கமிட்டிக்குத் தலைவராக நியமிக்க வேண்டும், உறுப்பினர்களில் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் பெண்கள் இடம்பெற வேண்டும், அலுவலகம் சாராத, பாலின சமத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் என்ஜிஓ போன்றவற்றில் செயல்படும் ஒருவர் கமிட்டியில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதுபோலப் பல விதிமுறைகளை கமிட்டி அமைக்கும்போது பின்பற்ற வேண்டும். இவை சில விதிமுறைகள் மட்டுமே. முக்கியமாக, பாலியல் புகாரை ஒருவர் அளிக்கும்போது அதைப் பதிவு செய்யச் சில நடைமுறைகள் பின்பற்றப்படக் கோரப்படுகிறது. உதாரணமாக, புகார் தருபவர்கள் பெயரிலியாகப் புகார் தரக் கூடாது. விவகாரத்தில் பாதிப்பைச் செய்ததாகக் கருதப்படுபவர், சாட்சிகள் ஆகியோர் பெயர்களைத் தர வேண்டும். புகார் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டும் அல்லது பதிவு செய்யப்பட்டு கையெழுத்திடப்பட வேண்டும் என விதிகள் உண்டு.

இந்த விதிகளை அறிமுகப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. பல சமயம், இந்த “due process” என்பது நடைமுறையில் சிக்கல்களைக் கொண்டது என்பதைத் தெரிவிக்கவே இங்கே குறிப்பிட்டேன். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் அல்லது அலுவலகத்தில் ஆக உயர் மட்டத்தில் பதவி வகிக்கும் ஆண் அதிகாரிமீது புகார் வந்தால் அவருக்குக் கீழே அல்லது இணையாக வேலை பார்ப்பவர்கள் ICC குழுவில் பங்கு வகிக்கும்போது எந்த அளவுக்கு விசாரணை பாரபட்சமின்றி, அழுத்தங்களுக்கு ஆட்படாமல் நடக்கும் என்கிற யதார்த்தம் ஒரு பக்கம். அதைவிட முக்கியமாக, due process என்பது கண் துடைப்பாகக்கூட இல்லாமல், அப்பட்டமான பால் பாகுபாட்டு அதிகாரம் நிகழ்த்தப்படுவது இன்னொரு பக்கம். இரண்டாவதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

ரஞ்சன் கோகாய்: குற்றச்சாட்டும் அதன் பின்னும்

முதல் எடுத்துக்காட்டு, தற்போது பரபரப்பாகப் பேசப்படும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் உச்ச நீதிமன்றப் பெண் ஊழியர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதியன்று வைத்த பாலியல் புகார் விசாரிக்கப்படும் விதம். இது குறித்து ஆராய்வதற்கு முன்னால், இந்தப் புகார் சார்ந்த அடிப்படைத் தகவல்களை, அவை பேசப்பட்டிருந்தாலும், ஓர்மைக்காக இங்கே தருகிறேன். புகாரின் பின்னணியை, அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த அத்துமீறல்களையும் துன்புறுத்தல்களையும் பற்றிய விரிவான தகவல்களை தி வயர் இணையதளம் பதிவுசெய்துள்ளது

இந்தப் புகார் குறித்த விசாரணையின் போக்கை லைவ்லா என்னும் இணையதளம் பதிவுசெய்துள்ளது..

பெண் ஊழியர் நீதிபதி வீட்டு அலுவலகத்தில் பணியாற்ற மாற்றப்பட்டதிலிருந்து, பல தொல்லைகளை அனுபவிக்கிறார். வாட்ஸ் அப்பில், காலை வணக்கம் சொல்லக் கோருவதிலிருந்து அத்துமீறித் தொடுதல் வரைக்கும் நீதிபதியின் அத்துமீறல் போகிறது. பெண் ஊழியர் அதை வரவேற்காததால்அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தினரும் பல்வேறு தொல்லைகளுக்குத் தொடர்ந்து ஆளாகியிருக்கிறார்கள். மிகக் குறைந்த கால இடைவெளிகளில் பணியிட மாற்றங்கள், பிறகு பணி இடைநீக்கம். அவர் மட்டுமல்லாமல் அவர் கணவரும், கணவரின் சகோதரரும் பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். நடுவில், அந்தப் பெண்ணிடம் திலக் மார்க் காவல் நிலைய ஆய்வாளர் மூலம், நீதிபதி காலில் விழுந்தால் அவரது, அவர் குடும்பத்தினரின் பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. நீதிபதி கோகாயின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.. அங்கே கோகாயின் மனைவி “மூக்கு தரையில் பட” அவரைக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்கிறார். இந்தப் பெண்ணும் காலில் விழுகிறார். ஆனால் எந்த விடிவும் ஏற்படுவதில்லை என்பதை தி வயர் வெளியிட்டுள்ள கட்டுரையில் காணலாம்

சீக்கிரமே நீதிமன்றத்தில் தற்காலிக வேலையிலிருந்து கணவரின் சகோதரரும் (அவருக்கு இவ்வேலையை தனக்கான விருப்பக் கோட்டாவில் வாங்கிக் கொடுத்ததே கோகாய்தான்) நீக்கப்படுகிறார். எல்லாவற்றுக்கும் உச்சமாக அந்தப் பெண்மீது லஞ்சக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவர் கைது செய்யப்படுகிறார். புகார் அவர் மீதுதான் என்றாலும் அவர் கணவரும் அவர் கணவரின் சகோதரியும் கைது செய்யப்படுகிறார்கள். கணவரும் கை விலங்கிட்டு வைக்கப்படுகிறார். அந்தப் பெண் கால் விலங்கிட்டு இரவு முழுதும் வைக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

வழக்கில் அவருக்கு பெயில் கிடைத்த பிறகு கையூட்டு தந்தவரை அவர் குடும்பம் மிரட்டியது எனக் கூறப்பட்டு, வழக்கு குற்ற வகைக்கு மாற்றப்பட்டு, பெயிலை ரத்து செய்யக் கேட்டு காவல் துறை நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது. இந்த அளவுக்கு அச்சுறுத்தல்களைச் சந்தித்த நிலையில் அந்தப் பெண் தானும் தன் குடும்பத்தினரும் சந்தித்தவற்றை ஒரு பிரமாண வாக்குமூலம் போன்ற கடிதம் வாயிலாக 22 உச்ச நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரிவிக்கிறார்.

விசாரணை நடந்த விதம்

இந்த அளவு அச்சுறுத்தல்கள் நிகழ்ந்த நிலையில், அதுவும் இதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சம்பந்தப்பட்டிருக்கிறார் எனும்போது, due process என்பது எப்படி நடந்திருக்க வேண்டும்? எந்த அளவுக்கு, முன்மாதிரியாக அது உச்ச நீதிமன்றத்தால் நடத்தப்பட்டிருக்க வேண்டும்? ஆனால், due process என்ற ஒன்றே கிட்டத்தட்ட இல்லாத நிலையைத்தான் நாம் பார்க்கிறோம். பெண்ணின் ‘பிரமாண வாக்குமூலம்’ போன்ற கடிதம் ஊடகத்தில் கவனம் பெற்ற பின், சிறப்பு அமர்வு ஒன்றை உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்கிறது. இந்த அமர்வுக்காக உச்ச நீதிமன்றத்தின் பதிவுப் பிரிவால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நீதித் துறையின் சுதந்திரத்தை உரசிப்பார்க்கும் வகையிலான பெரிய அளவு முக்கியத்துவம் கொண்ட” பொதுநல விஷயம் ஒன்றை விசாரிப்பதற்கான அமர்வு என்று இது குறிப்பிடப்படுவது இதில்கவனிக்க வேண்டியது. எந்த அளவுக்கு உச்ச நீதிமன்றம் சார்ந்த இந்த விவகாரத்தில் பக்கச் சார்பு காட்டப்படுகிறது என்பதற்குச் சான்றாக அமைகிறது இந்த அறிக்கை.

புகாரை விசாரிக்கும் முன்னரே நீதித் துறையின் சுதந்திரம் புகாரால் பாதிக்கப்படுவதைப் போன்ற ஒரு தோற்றம் இதனால் உருவாக்கப்படுகிறது. தவிர, மூன்று நீதிபதிகள் இடம்பெற்ற இந்த அமர்வில் ஒரு பெண் நீதிபதிகூட இல்லை என்பதோடு, கேலிக்கூத்தாக புகார் சாட்டப்பட்ட கோகாயே ஒரு நீதிபதியாக அமர்கிறார். அப்போது அவர் கூறியதை நோக்க வேண்டும். முதலில், தான் பதில் சொல்லத்தக்க “குற்றச்சாட்டுகள்” இல்லை அவை என்பதுபோலக் கூறுகிறார்.. இரண்டாவதாக, “இருபது வருட தன்னலமற்ற பணிக்குப் பின்” தன்னுடைய வங்கிக்கணக்கில் 6.80 லட்ச ரூபாய்தான் இருக்கிறது, அதுதான் தன் மொத்தச் சொத்து என்கிறார். தன்மீது கூறப்பட்ட பாலியல் புகாரைச் சமன்படுத்தத் தன்னைப் பற்றிய புனித பிம்பம் அவரால் முன்வைக்கப்படுகிறது.

அதே அமர்வில் அவரோடிருந்த நீதிபதிகள் கன்னாவும் மிஸ்ராவும் ஊடகம் “கட்டுப்பாட்டுடன்” செயல்பட வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். ஏப்ரல் 20ஆம் தேதியே உத்சவ் பெயின்ஸ் என்ற தில்லி வழக்கறிஞர் இந்தப் பாலியல் புகாரை ஒரு சதியோடு இணைத்துக் குற்றம்சாட்டுகிறார். ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட்கள், சில நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் கார்ப்பரேட் தரகர்கள் போன்ற பலரது லாபியால் இது நடந்ததெனப் பரபரப்புச் செய்தி தருகிறார். கோகாயை வலையில் சிக்கவைக்கத் தனக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் தருவதாக ஆசை காட்டப்பட்டதாகப் பிரமாணப் பத்திரம் ஒன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இவற்றில் மூலம், கோகாய் அப்பழுக்கற்றவர் என்கிற பிம்பம் மேலும் உறுதிப்படுகிறது. பெயின்ஸின் ‘சதி’ குற்றச்சாட்டு தனியாக உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறது.

பாலியல் புகாரைப் பொறுத்தவரை, அதை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளின் உட்குழுவில் (in-house panel) எஸ்.ஏ.போப்தே, இந்திர பானர்ஜி ஆகியோரோடு கோகாயின் நெருங்கிய நண்பர் என்.வி.ரமணாவும் இடம்பெற்றார். ரமணா கோகாயின் நெருங்கிய நண்பர் ஆதலால் அவர் பங்கேற்பு குறித்து புகார் தந்த பெண் அதிருப்தி தெரிவித்த காரணத்தால், ரமணா விலகி, அவரது இடத்தில் இன்னொரு நீதிபதி பங்கேற்றார். ஆனால், இந்த நீதிபதிகள் குழுவின் விசாரணை தனக்கு நீதி வழங்குமென்ற நம்பிக்கை தோன்றவில்லை என அந்தப் பெண் தெரிவித்துவிட்டு, விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்.

அதற்கு அவருக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. நீதிபதிகள் குழு, இந்த விசாரணையில் பின்பற்றப்படும் நடைமுறைகள் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை, விசாரணை ஒளி, ஒலிப் பதிவு செய்யப்படவில்லை, அந்தப் பெண் அளித்த அறிக்கையின் நகல் அவருக்குத் தரப்படவில்லை, முக்கியமாக அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் அல்லது துணையாக ஒருவர்கூட அனுமதிக்கப்படவில்லை. பாலியல் அத்துமீறல் விவகாரம் சார்ந்த மன அழுத்தத்தால் செவித்திறன் குறைபட்டவர் அந்தப் பெண் என்பது முக்கியம். புகார் தந்த பெண் விசாரணையிலிருந்து விலகிய பின்னும், அவர் இல்லாமலேயே விசாரணையைத் தொடர்ந்தது நீதிபதிகளின் உட்குழு. தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த கோகாயை விசாரித்தது. மே 6 அன்று நீதிபதி கோகாய் குற்றமற்றவர் என உட்குழு முடிவுக்கு வந்திருப்பதாக நீதிமன்றச் செய்தி அறிவிப்பு தெரிவிக்கிறது. புகார் வைத்த பெண் பங்கேற்காத நிலையில் என்ன விசாரித்தார்கள், எப்படி, எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தார்கள் என்பதன் மர்மம் விளங்காத நிலையில், வழக்கறிஞர் அமைப்புகள் உட்பட்ட அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள் இந்த முடிவுக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கின்றன.

பெரும் பின்னடைவு

தன் “மோசமான அச்சங்கள் அனைத்தும் நிஜமாகிவிட்டதாக, இந்த நாட்டின் ஆகவும் உயரிய இடத்தில் இருக்கும் நீதிமன்றத்திலிருந்து தனக்கான நீதி, குறைக்கான நிவர்த்தி கிடைக்கும் என்ற எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்த நாள் இது” என பாலியல் புகார் அளித்த பெண் கூறியிருக்கிறார். உண்மையில், பால் சமத்துவம் என்ற இலக்கை நோக்கிய இன்றியமையாத பயணத்தில் பெரும் முட்டுக்கட்டையை, உச்ச நீதிமன்றத்தின் விசாரணை போட்டிருக்கிறது. நீதிபதிகளின் உட்குழு முடிவு, இதுவரை வந்த பாதையில் பல நூறு மைல்களுக்குப் பெண்களைப் பின்னால் தள்ளிவிட்டிருக்கிறது.

விசாரணையின் சில பரிமாணங்களைக் குறித்து அடுத்த கட்டுரையில் மேற்கொண்டு பார்ப்போம்.

வியாழன், 9 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon