மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 26 பிப் 2020

திரும்பிய திசையெல்லாம் தசாவதானிகள்!

திரும்பிய திசையெல்லாம் தசாவதானிகள்!

சமூக வலைதளங்களும் நாமும் - 5: நவீனா

உலகம் கண்ட தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரும் சார்பியல் கோட்பாட்டைத் தந்தவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அறிவியலுக்காகத் தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். 1955ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடலை முழுமையாகப் பரிசோதனை செய்துவிட்டு, அவரது தமனியில் உட்புறமாக ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், சிறு அறுவை சிகிச்சை மூலம் அதை எளிதில் குணப்படுத்திவிட முடியும் என்றும் கூறினார்கள்.

அதற்கு அவர், “அறிவியலைக் கொண்டு செயற்கையாக வாழ்நாளை நீட்டிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? நான் போக வேண்டிய நேரம் வரும்போது போவதையே விரும்புகிறேன். இந்த உலகில் எனக்கான கடமைகளை நேர்த்தியாகச் செய்து முடித்தது போலவே, எனது இறப்பையும் நேர்த்தியாக ஏற்றுக்கொள்வேன்” என்றார். மிகக் குறுகிய காலமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட அவர், அறுவை சிகிச்சை எதுவும் செய்துகொள்ளாமல் 76ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

அறுவை சிகிச்சையின் மூலம் தன் வாழ்நாளை நீட்டிப்பதையே இயற்கைக்கு விரோதமானதாக ஐன்ஸ்டைன் கருதினார். ஆனால், இன்று அறிவியலும் அதன் முன்னேற்றங்களும் இயற்கையிலிருந்தும் இயல்பான வாழ்விலிருந்தும் பல்வேறு வகையில் நம்மைப் பிரித்து நெடுந்தூரம் கொண்டுசென்றுவிட்டன. கைபேசிகளும் சமூக வலைதளங்களும் மனித வாழ்க்கையை ஆக்கிரமிக்க நேர்ந்ததிலிருந்து நாம் யதார்த்தத்தை விட்டு வெகு தொலைவில் நிற்பதாகவே தோன்றுகிறது.

அறிவியல் மேதைகள்கூடத் தங்களின் வாழ்க்கையை அறிவியலின் ஆதிக்கத்திலிருந்து சற்று விலக்கியே வைத்திருந்திருக்கின்றனர். ஆனால், நாம் சில விநாடிகள்கூட இன்று கைபேசிகளையும் சமூக வலைதளங்களையும் பிரிந்திருக்க விரும்புவதில்லை.

சீத்தலைச் சாத்தனார் ஓர் அஷ்டாவதானி என்றும் அவர் ஒரே நேரத்தில் எட்டுப் பேரின் கேள்விகளை உள்வாங்கிக்கொண்டு பதில் அளிக்கக் கூடியவர் என்றும் கேள்விப்பட்டிருப்போம். இதனையே ‘மல்டிடாஸ்கிங்’ (Multitasking) என்று அழைக்கின்றனர். அத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த ஒருசிலரை இப்போதும் உலகம் பிரமிப்போடுதான் பார்த்துவருகிறது. இன்று சமூக வலைதளங்கள் நம்மில் பலரையும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக மாற்றிவிட்டது. ஆனால், இந்த மாற்றம் ஆக்கபூர்வமான வகையில் மனிதனை மாற்றியதாகவோ அல்லது மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடியதாகவோ தென்படவில்லை.

அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, புத்தகம் படிக்கும்போது, சமையல் செய்யும்போது, இன்னும் வேறு எந்த ஓர் அலுவலில் ஈடுபடும்போது, ஏன் இரவு உறக்கத்தின் இடையில் விழிக்கும்போதுகூட சமூக வலைதளங்களின் நோட்டிஃபிகேஷனைப் பார்ப்பது இன்று இயல்பானதாகிவிட்டது. இதனால் சமூகத்துக்கும் தனிமனிதருக்கும் எதிர்மறை விளைவுகளே அதிகமாகிவருகின்றன.

இந்த விதமான ‘மல்டிடாஸ்கிங்’ மனித மூளையைச் சேதப்படுத்துகிறது என்பது மருத்துவ அறிவியல் ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. மனித மூளை ஒரு நேரத்தில் ஒரு வேலையின் மீது கவனம் செலுத்திக்கொண்டிருக்கும்போது, திடீரென இன்னொரு புதிய செயல்பாட்டின்மீது கவனம் திசை திருப்பப்படுவதால் அதன் செயல்படும் திறன் குறைந்துவிடும் என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. மேலும், ஒரு வேலையை அதன் மீதான ஈடுபாடு குறையாமல் செய்து முடிக்க ஆகும் நேரத்தைவிட, மற்ற வேலைகளிலும் ஈடுபட்டுக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிக்க அதிக நேரம் தேவைப்படுவதால், மல்டிடாஸ்கிங்கின்போது கால விரயமாவதையும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, அதனிடையே எண்ணற்ற வேலைகளில் ஈடுபடுவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு, எடுத்த வேலையைத் திறம்பட முடிக்க முடியாத சூழலும் ஏற்படுகிறது. இத்தகைய இடையூறுகளால் சுயமுன்னேற்றத்திலிருந்து சமூக முன்னேற்றம் வரை பலதரப்பட்ட பாதிப்புகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மல்டிடாஸ்கிங் பல உளவியல் ரீதியான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. அவற்றுள் ஒன்று ஃபேண்டம் வைப்ரேஷன் சிண்ட்ரோம் (Phantom vibration syndrome) எனும் ஒரு வகை உளவியல் பாதிப்பு. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோரிடம் இது இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மிக முக்கியமான பணியில் இருக்கும்போது அல்லது அலுவலகக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதுகூட பலர் தங்கள் கைபேசிகள் வைப்ரேட் ஆகாமலேயே, வைப்ரேட் ஆனதாக உணர்ந்து கைபேசியை எடுத்துப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். உண்மையில் கைபேசி வைப்ரேட் ஆகாதபோதும் இவ்வாறான கற்பனையில் கைபேசிகளை எடுத்துப் பார்க்கும் நிலையையே ‘ஃபேண்டம் வைப்ரேஷன் சிண்ட்ரோம்’ என்கின்றனர்.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 89 சதவிகிதம் பேர் இரண்டு வாரங்களில் ஒருமுறையாவது கைபேசி வைப்ரேட் ஆவதைப் போல உணர்ந்து, மிக முக்கியமான பணிகளுக்கு இடையில்கூட அதை எடுத்துப் பார்த்ததாக ஒப்புக்கொள்கின்றனர். இம்மாதிரியான உளவியல் தாக்கம் ஏறத்தாழ நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

இதைச் சரிசெய்யவும் இவ்வாறான உளவியல் பிரச்சினைகளிலிருந்து வெளிவரவும் முதலில் சமூக வலைதளங்களின் பயன்பாட்டை நமக்கு நாமே நெறிப்படுத்திக்கொள்வது மிகவும் உறுதுணையாக இருக்கும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, உணவு அருந்துதல் மற்றும் இன்னபிற அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது, கைபேசிகளை நம்மிடமிருந்து சற்றுத் தொலைவில் வைத்துவிடுவதால் உடனுக்குடன் நோட்டிஃபிகேஷன் பார்க்கும் பழக்கம் நாளடைவில் குறைந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர்.

ஒவ்வொருவரும் தாங்கள் ஈடுபட்டிருக்கும் பணிக்கு ஏற்ப, இயன்றவரை கைபேசிகளை எப்போதும் அருகிலேயே வைத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நாளடைவில் தேவைக்கு மட்டும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நிலையை அடைய இந்தப் பழக்கம் உதவும்.

நாமே வகுத்துக்கொள்ள வேண்டிய எல்லைகள்

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பா? மும்முனை வியூகம்!

.

நீட்: கல்வி வணிகர்கள் விரிக்கும் வலை!

.

அமமுகவில் இணைந்த கொங்கு பாமக பிரமுகர்கள்!

.

தேனிக்கு திடீர் இயந்திரங்கள்: ஓ.பன்னீர் மகனை ஜெயிக்க வைக்க முயற்சியா?

.

திருப்பரங்குன்றம்: மலையேறப் போவது யார்?

வியாழன், 9 மே 2019

chevronLeft iconமுந்தையது