மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

அமமுகவில் இணைந்த கொங்கு பாமக பிரமுகர்கள்!

அமமுகவில் இணைந்த கொங்கு பாமக பிரமுகர்கள்!

பாமகவிலிருந்து ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் ஆகிய இரு மாநிலத் துணைத் தலைவர்கள் அமமுகவில் இணைந்த நிலையில் மேலும் ஒரு மாநிலத் துணைத் தலைவர், இரு மாவட்டச் செயலாளர்கள் நேற்று (மே 7) பாமகவிலிருந்து விலகி அமமுக பொதுச் செயலாளர் தினகரன் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தனர்.

பாமக மாநிலத் துணைத் தலைவர் காங்கயம் கி.மாதவன், மாவட்டச் செயலாளர்கள் இரா.கணேஷ் (கோவை தெற்கு), கொங்கு கிஷோர் (கோவை மாநகர்) ஆகியோர் நேற்று சூலூர் இடைத் தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு வருகை தந்த டிடிவி தினகரனைச் சந்தித்து தங்களை இணைத்துக் கொண்டனர்.

இவர்களில் பாமக மாநிலத் துணைத் தலைவர் காங்கயம் கி.மாதவன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பாமகவில் 1989 முதல் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டவர்.

பாமகவில் 30 ஆண்டுக் காலம் பயணித்துவிட்டு ஏன் அமமுகவில் இணைந்தீர்கள் என்று மாதவனிடமே கேட்டோம்.

“பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிக் கொள்கையை நம்பி அந்தக் கட்சி நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றவன் நான். ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் தலித் சமுதாய மக்களைப் பெருமளவில் கட்சியில் இணைத்ததன் மூலமே 2001 இல் அதிமுக கூட்டணியில் அந்தியூர் மற்றும் தாராபுரம் தொகுதியைப் பெற்று தனித் தொகுதியான தாராபுரம் தொகுதியை பாமக பெற்று வெற்றி பெற்றது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தாராபுரம் நகராட்சி தலைவராக்கினோம். ஆனால், பாமகவும் ராமதாஸும் சமூக நீதி என்ற பெயரில் எங்களைப் போன்ற தலித் சமுதாய மக்களை ஏமாற்றியும்,மற்ற சமுதாய மக்களைப் பிரித்து சாதி மோதலை உருவாக்கியும் வந்து இருப்பதை இப்போதுதான் உணருகிறோம். 30 ஆண்டுகள் பெரும் மனச்சுமையோடு பாமகவில் பணியாற்றி எனது வாழ்க்கையில் நான் செய்த வரலாற்றுத் தவற்றுக்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் அமமுகவில் இணைய முடிவு செய்தேன். இதைக் கடிதம் மூலம் தினகரனுக்குத் தெரியப்படுத்திய பிறகு அவர் முன்னிலையில் இணைந்தேன்” என்கிறார் மாதவன்.

பாமகவில் இருக்கும் கொங்கு பகுதி நிர்வாகிகளை பொங்கலூர் மணிகண்டன் முழு முயற்சி எடுத்து அமமுகவில் சேர்த்து வருவதால் அவர் மீது பாமகவினர் கோபத்தில் இருக்கிறார்கள்.

.

மேலும் படிக்க

திமுக புள்ளிகளிடம் போனில் பேசிய ராமதாஸ்

.

அஜித் பாடல்களுக்குத் தடை!

.

தென்மாவட்ட ரிசல்ட்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

நீட்: கல்வி வணிகர்கள் விரிக்கும் வலை!

.

டிஜிட்டல் திண்ணை: தினகரனிடம் ஏமாந்த எடப்பாடி

புதன், 8 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon