மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

திருப்பரங்குன்றம்: மலையேறப் போவது யார்?

திருப்பரங்குன்றம்: மலையேறப் போவது யார்?

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி கடந்த மூன்று வருடங்களில் மூன்றாவது தேர்தலைச் சந்திக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சீனிவேல் பதவி ஏற்கும் முன்பே இறந்துபோக, ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையிலிருந்த சமயத்தில் 2016 நவம்பர் 19இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணனைத் தோற்கடித்து வெற்றிபெற்றார் ஏ.கே.போஸ். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அவரும் காலமானார். இதனிடையே ஜெயலலிதா கைரேகை போலியானது என சரவணன் தொடர்ந்த வழக்கில், ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மீண்டும் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது திருப்பரங்குன்றம்.

தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக, சுயேச்சைகள் என 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 2.80 லட்சம் வாக்காளர்கள் உள்ள திருப்பரங்குன்றத்தில், மொத்தம் 297 வாக்குச் சாவடிகள் உள்ளன. அதிமுக வேட்பாளர் முனியாண்டி, அமமுக வேட்பாளர் மகேந்திரன் இருவரும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சேர்வை (மறவர்) சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதியில் அதிகமாகக் கள்ளர் வாக்குகள் உள்ளன. அதற்கடுத்தபடியாக இஸ்லாமியர் வாக்குகள் கணிசமாக உள்ளன.

தொகுதிக்குள் பிரச்சாரம் செய்யும் திமுகவினர் பாஜகவை அதிகமாக விமர்சனம் செய்து பேசவில்லை. அமமுகவோ அதிமுகவையும், மத்தியில் ஆளக்கூடிய பாஜக ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசிவருவதால் இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளைக் கணிசமாக வாங்கும் என்கிறார்கள் தொகுதியில் உள்ளவர்கள்.

தொடர்ந்து இரண்டு முறை அதிமுக வெற்றிபெற்ற தொகுதி என்பதால் இந்த முறையும் விடக் கூடாது, எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று பல திட்டங்களைப் போட்டுவருகிறார்கள் ஆளுங்கட்சியினர். தொகுதியில் உள்ள கள்ளர் சமூக வாக்குகளை அதிமுக, அமமுகவினர் பிரித்துக்கொள்வார்கள். இதனால் மறவர் வாக்குகள், இதர சமுதாய வாக்குகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்று பார்டரில் வெற்றி பெற்று விடலாம் என்று தொகுதியைச் சுற்றி வலம் வருகிறார் திமுக தொகுதி பொறுப்பாளர் ஐ.பெரியசாமி.

தற்போதைய நிலவரப்படி மூன்று கட்சிகளின் வேட்பாளர்களும் சம பலம் வகிக்கிறார்கள். தேர்தல் வெற்றியில் முந்துவது கரன்சியா, சாதிக் கணக்கா என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவில் பார்க்கலாம்.

.

மேலும் படிக்க

திமுக புள்ளிகளிடம் போனில் பேசிய ராமதாஸ்

.

அஜித் பாடல்களுக்குத் தடை!

.

தென்மாவட்ட ரிசல்ட்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

நீட்: கல்வி வணிகர்கள் விரிக்கும் வலை!

.

டிஜிட்டல் திண்ணை: தினகரனிடம் ஏமாந்த எடப்பாடி

புதன், 8 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon