மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 6

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 6

ஓட்டப்பந்தயத்தில் பத்து பேர் ஓடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஆரம்பக் கோடு இருந்தால் அது நியாயமாக இருக்குமா? மேலும், அவர்களில் ஐந்து பேர் சாதாரணமாகவும், மற்ற ஐந்து பேர் கால்களில் சாக்குப்பை கட்டிக்கொண்டும் ஓட வேண்டும் என்றால், அது மிகப்பெரும் அநியாயமாகவே கருதப்படும் இல்லையா?

சமுதாயத்தில் அனைவரும் தங்கள் வாழ்க்கையை ஒரே புள்ளியில் தொடங்குகின்றனர் என்றால், அது நியாயமான ஏற்பாடாகவே பார்க்கப்படும். ஒரே அளவுக்கு வருமானம் மற்றும் சொத்துகள், ஒரே மாதிரியான உரிமைகள், சமமான சமூக - பொருளாதார வாய்ப்புகள் போன்றவையெல்லாம் அனைவருக்கும் கிடைப்பதை அரசு தொடக்கத்திலேயே உறுதி செய்துவிட்டால், இவற்றை வைத்துக்கொண்டு வாழ்வில் இயன்றவரை முன்னேறுவது தனிநபரின் பொறுப்பு என்பது ஒருதரப்பு வாதம்.

‘அரசியல், சமுதாயம், பொருளாதாரம் என எந்த தளத்திலும் சமத்துவம் என்பதே இல்லை. அதிகாரம் படைத்த சிலர் மட்டுமே செழிப்பாக வாழ்கின்றனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள், வெவ்வேறு புள்ளிகளில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க நேரிடுவதால், அந்த அநீதியைச் சரிசெய்ய, வளங்களும் வாய்ப்புகளும் நியாயமான முறையில் மறுபகிர்வு செய்யப்பட வேண்டும்’ என்பது இன்னொரு தரப்பு வாதம்.

சந்தைப் பொருளாதாரத்தில் பங்குபெற்று, அது வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால், சமுதாயத்தில் ஆரம்ப நிலையில் சமத்துவம் நிலவுவது அவசியம். அது நடக்காமல் போனால், சமூகத்தில் பலர் வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் பின்தங்கிவிடுவர்.

அரசு தன்னுடைய செலவைக் குறைத்துக்கொள்ள வேண்டும், தனியார் துறையைச் சுதந்திரமாகச் செயல்பட விட வேண்டும், செல்வந்தர்கள் மீது அதிக வரி போட்டால் அவர்களுக்கு முதலீடு செய்வதற்கான ஊக்கம் போய்விடும் எனும் கோட்பாடுகளை தாராளவாத அறிவுஜீவிகள் முன்மொழிய, கடந்த முப்பதாண்டுகளாக அரசுகள் அதன்படியே நடந்ததன் விளைவாகவே உலகெங்கும் சமமின்மை இதுவரை எவரும் கண்டிராத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் இரண்டிலும் சமூக - பொருளாதார சமமின்மை அதிகரித்துக்கொண்டே போவதால், பலருக்குப் பந்தயத்தில் ஓடுவதற்கான ஊக்கமும், சக்தியும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது; இந்த அநியாயத்திற்கு எதிராக மக்கள் போராடவும் தொடங்கியுள்ளனர். ‘பெரும்பான்மை மக்களின் கோபத்தை முதலீடாகக் கொண்டு பிற்போக்கு சித்தாந்தங்களைக் கொண்ட வலதுசாரி அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முயல்கின்றன. இந்தப் போக்கை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்’ எனும் கருத்து தாராளவாத அறிவுஜீவிகள் மத்தியில் பரவலாக இருக்கிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வியூகத்தில் அனைவருக்குமான அடிப்படை வருமானம் முக்கிய அங்கம் வகிக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். விதைத்த வினையை அறுக்கும் நேரம் வந்துவிட்டது என்று அவர்கள் உணர்ந்துவிட்டார்கள் போலும்.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 2

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 3

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 5

புதன், 8 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon