மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 மே 2019

ஒருமை – பன்மை மயக்கம் எப்படி ஏற்படுகிறது?

ஒருமை – பன்மை மயக்கம் எப்படி ஏற்படுகிறது?

ஒரு சொல் கேளீரோ! – 3: அரவிந்தன்

மீறக் கூடாத விதிகளில் ஒன்று ஒருமை பன்மை. இதில் பல தவறுகள் நேர்ந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. பலரும் இதில் கோட்டைவிடுகிறார்கள். இதில் பிழையின்றி எழுதுவது எப்படி என்று பார்க்கலாம்.

எழுவாய் ஒருமையாக இருந்தால் அதற்கான பயனிலை அல்லது வினைமுற்றிலும் ஒருமை வர வேண்டும்.

அவன் வீட்டுக்கு வருகிறான்.

மிட்டாய் கடையில் கிடைக்கிறது.

இந்த இரு வாக்கியங்களிலும் அவன், மிட்டாய் ஆகிய எழுவாய்ச் சொற்கள் ஒருமை. எனவே வருகிறான், கிடைக்கிறது என்று வினைமுற்றுக்களிலும் ஒருமை உள்ளது.

அவர்கள் விரைந்து வருகிறார்கள்

நிவாரணப் பொருள்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன

இந்த வாக்கியங்களில் அவர்கள், நிவாரணப் பொருள்கள் ஆகிய எழுவாய்ச் சொற்கள் பன்மை. எனவே வருகிறார்கள், வழங்கப்படுகின்றன என்று வினைமுற்றுக்களிலும் பன்மை உள்ளது.

பொருள்கள் வழங்கப்படுகிறது என்று எழுதினால் அது பிழை. இதுதான் ஒருமை - பன்மை மயக்கம்.

ஒருமை – பன்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் ஏன் இதில் தவறு வருகிறது?

ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்ச் சொற்கள் இடம்பெறும்போது இந்த மயக்கம் ஏற்படக்கூடும். எடுத்துக்காட்டு:

விஷக் காய்ச்சல் நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மக்களிடையே பரவிவருகிறது.

மாவட்டங்கள், மக்கள், விஷக் காய்ச்சல் ஆகிய அனைத்துமே பெயர்ச் சொற்கள்தான். இவற்றில் முதல் இரு சொற்கள் பன்மை. விஷக் காய்ச்சல் என்பது ஒருமை. எனவே, பரவுதல் என்னும் வினைமுற்றுக்கு ஒருமையைப் பயன்படுத்துவதா, பன்மையைப் பயன்படுத்துவதா என்னும் குழப்பம் ஏற்படலாம்.

எத்தனை பெயர்ச் சொற்கள் இருந்தாலும் எழுவாய் என்பது ஒன்றுதான். அதாவது, குறிப்பிட்ட வினையைச் செய்வது யார் அல்லது எது என்பதுதான் எழுவாய். இங்கே பரவுவது எது? மாவட்டங்களா, மக்களா, காய்ச்சலா?

காய்ச்சல் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஒருமை. எனவே வினைமுற்றிலும் ஒருமையைப் பயன்படுத்த வேண்டும்.

எந்த வாக்கியமாக இருந்தாலும் அதில் உள்ள செயலைச் (வினையை) செய்வது யார் அல்லது எது என்று பார்க்க வேண்டும். கொடுக்கப்படுகிறது / கொடுக்கப்படுகிறார் என்று வந்தால் எதற்கு / யாருக்கு என்பதைப் பார்க்க வேண்டும். அது ஒருமையா, பன்மையா எனப் பார்க்க வேண்டும். அதற்கேற்ப வினைமுற்றில் ஒருமை அல்லது பன்மையைப் பயன்படுத்த வேண்டும்.

திட்டங்கள் தீட்டப்படுகின்றன

விமானம் தரையிறங்குகிறது

கப்பல்கள் கிளம்புகின்றன

மாணவர்கள் பந்தை விரட்டுகிறார்கள்

ஆசிரியர் அனிதாவையும் முருகனையும் அழைத்தார் (அழைத்தல் என்னும் வினையைச் செய்பவர் ஆசிரியர். இது ஒருமைச் சொல். எனவே வினைமுற்றில் அழைத்தார் என்று வருகிறது.)

புதிய சாலைத் திட்டத்தைப் பிரதமரும் முதல்வரும் தொடங்கிவைத்தார்கள் (தொடங்கிவைப்பது என்னும் வினையைச் செய்வது இருவர். இருவர் பன்மை. எனவே வினைமுற்றில் பன்மை பயன்படுத்தப்படுகிறது.)

மைதானம் மாணவர்களால் சுத்தம்செய்யப்பட்டது (இங்கு எழுவாய் மாணவர்கள் அல்ல. மைதானம். அது ஒருமை. எனவே வினைமுற்றிலும் ஒருமை.).

மேலே கண்டுள்ள எடுத்துக்காட்டுகளைக் கவனமாகப் பார்க்கும்போது ஒருமை – பன்மை பயன்பாட்டின் முக்கியமான சில வகைகளை அறிந்துகொள்ள இயலும்.

இதிலுள்ள மேலும் சில விதிகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளியன்று)

தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்

மொழியில் இருக்க வேண்டிய நெகிழ்வு!

புதன், 8 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon