மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 5

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 5

அனைவருக்குமான அடிப்படை வருமானம் என்று சொன்னதுடன், அது பொருளாதாரத்தின் மீது எவ்வகைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விதான் முதலில் எழும். சமூகநீதி, தனிநபர் சுதந்திரத்தை வளர்த்தெடுப்பதன் அடிப்படையிலான வாதங்கள் இக்கருத்தாக்கத்துக்குச் சாதகமாக முன்வைக்க முடியும் என்றாலும், பொருளாதாரத்தைப் பற்றிய கவலையே மேலாதிக்கம் செலுத்துகிறது என்றால் அது மிகையாக இருக்காது.

பொருளாதார வளர்ச்சி எனும் குறுகிய பார்வை கொண்டு அனைவருக்குமான அடிப்படை வருமானத்தைப் புரிந்துகொள்ள முயன்றாலும், அதுவும் ஓரளவுக்குப் பயனுள்ளதாகவே இருக்கும். 1930களில் மேற்கத்திய நாடுகளில் பொருளாதார உற்பத்தி பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியவுடன் அரசுகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேலையின்மை கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியது. அரசு கடன் வாங்கி செலவு செய்யக் கூடாது எனும் கொள்கையை எக்காரணத்துக்காகவும் கைவிடக் கூடாது என்று அந்நாடுகளின் அரசுகள் பிடிவாதமாக இருந்தன.

அந்த சமயத்தில் கீன்ஸ் எனும் பொருளாதார வல்லுநர், பொருளாதாரம் எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றிய பொதுவான புரிதலே தவறாக இருப்பதை சுட்டிக்காட்டினார். ‘உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படாமல் இருக்கின்றன. மக்களுக்கு வேலையில்லாததால் வருமானம் இல்லை. அதனால் அவர்களால் பொருட்களைச் சந்தையில் வாங்க முடியவில்லை. ஆக, பொருட்களுக்கான கிராக்கியின்மை காரணமாகத்தான் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது’ என்றார் கீன்ஸ். அதனால், கடன் வாங்கியாவது மக்கள் கையில் பணம் போட்டால், அவர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்; உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். இதன் விளைவாகப் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதே கீன்ஸ் வழங்கிய விளக்கம். அது பெருமளவுக்கு உண்மையும்கூட.

இன்று வளர்ந்த நாடுகளில் உற்பத்தித் திறன் வளரும் வேகத்தில் மக்களின் உண்மைக்கூலி அதிகரிப்பதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் 1970களிலிருந்தே உண்மைக்கூலி தேக்க நிலையில்தான் இருக்கிறது என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள். இதன் விளைவாக வளர்ந்த நாடுகளிலும் இதுவரை கண்டிராத அளவுக்குப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. இவை பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்கின்றன என்று பன்னாட்டு நிதியம்கூட (IMF) சொல்லும்போது, பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தினால் மட்டுமே வளர்ச்சியின் வேகத்தைக் கூட்ட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்கினால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்துவிட முடியுமா? செல்வந்தர்களின் சொத்துகள்மீது வரிபோட்டு, அதிலிருந்து திரட்டப்படும் நிதியை அடிப்படை வருமானமாக மக்களுக்கு மறுபகிர்வு செய்தால் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த அரசியல் துணிச்சலும், திராணியும் அரசுகளுக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 2

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 3

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4

செவ்வாய், 7 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon