மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

நீட்: கல்வி வணிகர்கள் விரிக்கும் வலை!

நீட்: கல்வி வணிகர்கள் விரிக்கும் வலை!

பா.நரேஷ்

‘வெளிநாட்டில் படிப்பு! படித்தவுடன் வேலை!’, ‘நீட் மதிப்பெண் தேவை இல்லை, கவலை வேண்டாம்! +2 மதிப்பெண் போதும்’…

இப்படிப்பட்ட விளம்பரங்களை நிறைய பார்த்திருப்பீர்கள். எல்லாம் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களை நோக்கி விரிக்கப்படும் வலைகள். மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவ சேர்க்கைகளில் நடக்கும் முறைகேடுகள் எல்லாம் கற்பனைக்கெட்டாதவை. நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து, பல்வேறு மாணவர்களின் மருத்துவப் படிப்பு வெறும் கனவாகியிருக்கிறது. இந்த நிராசையைத் தங்கள் வணிகத்துக்குச் சாதகமாக்கிக்கொள்ள முற்படும் போலிகளின் உறுதிமொழிகளைக் கேட்டால் பல்கலைக்கழகங்களே நம்பிவிடும். அதில் மிக முக்கியமானவை, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு எனும் மயக்க விளம்பரங்கள்.

தமிழகத்தில் மொத்தம் 24 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இருக்கின்றன. அலோபதி மருத்துவம் அல்லாது யுனானி, ஆயுர்வேதம் போன்ற பிற மருத்துவப் படிப்புகளுக்கென ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவப் படிப்புக்கென 6,510 இடங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் 15 சதவிகிதம் மத்திய அரசுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்கள். மீதமிருக்கும் ஐந்தாயிரத்துச் சொச்சம் இடங்களும் தமிழக மாணவர்களுக்கு இல்லை எனும் நிலையைக் கொண்டுவந்திருக்கிறது நீட் தேர்வு. இந்தச் சொற்பமான இடங்களுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் தங்கள் இடங்களைத் தவறவிடும் மாணவர்களை நோக்கி வலைவீசி, வெளிநாட்டு மருத்துவப் படிப்பு எனும் வணிகத்துக்குள் இழுக்கின்றனர் கல்வித் தரகர்கள்.

பிலிப்பைன்ஸில் இருக்கும் இதுபோன்ற ஒரு மருத்துவக் கல்லூரியில் பயின்றுவரும் மாணவி ஒருவரிடம் பேசினேன். “உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம்னு சொன்னாங்க ப்ரோ. 20 லட்சம் பேக்கேஜ்குள்ள மொத்தப் படிப்பையும் முடிச்சிடலாம்னு சொன்னாங்க. ஆனா, நடக்குற செலவுகளை எல்லாம் பாத்தா இன்னும் ரெண்டு மடங்கு அதிகமா செலவாகும்போல. இந்த வெளிநாட்டு மருத்துவ டிகிரிக்கெல்லாம் இந்தியாவுல வேல்யூ இருக்காது. அஞ்சு வருஷம் படிப்பு, அதுக்கப்புறம் ட்ரெய்னிங், அப்புறம் அடுத்த டிகிரினு ஓடும்போது வாழ்க்கையே முடிஞ்சிடுது. அப்புறம் வேற எதுவும் தேவையில்லைன்னு செலவு பண்ண காசை சம்பாதிக்கத்தான் தோணும். சேவை செய்யவா தோணும்?”

வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படித்தால் டாக்டர் ஆகிவிடலாம் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபமானது அல்ல. வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு படித்த மாணவர்கள், இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டுமென்றால், Foreign Medical Graduate Examination (FMGE) என்ற தேர்வெழுதித் தகுதியடைய வேண்டும். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற முடியும். இல்லையென்றால், வாங்கிய பட்டத்துக்குப் பயனில்லை. நீங்கள் மருத்துவம் படித்த நாட்டிலேயே மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றாலும் அதற்கும் சட்ட விதிகள் இல்லை.

மேலும், இந்த FMGE என்பது இரண்டு ‘நீட்’ தேர்வுகளுக்குச் சமமானது. நீட் தேர்வை எழுத முடியாமல் வெளிநாட்டுக்குச் சென்று மருத்துவப் படிப்புப் படிக்கும் இம்மாணவர்கள், திரும்ப அதேபோன்றே தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்று நினைப்பது தவறானது. அது அம்மாணவர்களின் இயல்புக்கு எதிரானது. இந்த மிக முக்கியமான தகவல்களை மறைத்துக் கல்வி வணிகர்கள் ஏமாற்றுகிறார்கள்.

நீட் தேர்வு எழுதவில்லை என்றால் பரவாயில்லை, வெளிநாடுகளில் படித்து மருத்துவராகலாம் என்று நினைக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் கொஞ்சம் கவனமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.

படிப்பைவிட வாழ்க்கை பெருமதிப்புடையது!

மூடப்பட வேண்டிய கல்லூரிகளும் திறக்கப்பட வேண்டிய கண்களும்

சுத்த வேஸ்ட் ப்ரோ!

செவ்வாய், 7 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon