மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4

மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை உரிமைகள் (Rights) இருக்கின்றன. மேலும், ஒவ்வொரு நாட்டின் அரசியல் சாசனமும் அந்நாட்டுக் குடிமக்களுக்கு சில உரிமைகளை வழங்கும்; அந்நாட்டுக் குடியாக இருந்தால் மட்டுமே அந்த உரிமைகளை அனுபவிக்க முடியும். இந்த உரிமைகள், ஒருவருடைய சுதந்திரம், ஆற்றல், செயல்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் கருவிகளாக இருக்க வேண்டும். இந்த உரிமைகள் பாரபட்சமின்றி அனைவரும் அனுபவிப்பதை உறுதிசெய்வது அந்நாட்டு அரசுகளின் கடமை.

கருத்துரிமை, விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான உரிமை, தனக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றும் உரிமை என்பதுபோல், வேலை செய்யும் உரிமையும் (Right to Work) ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து பல காலமாகவே இருந்து வந்துள்ளது. 1930களின் பெரும் பொருளாதார வீழ்ச்சி காலத்தில் மேற்கத்திய நாடுகளில் வேலையின்மை 25 விழுக்காடு வரை அதிகரித்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின், அனைவருக்கும் வேலை வழங்குவதைப் பல நாடுகள் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு பொருளாதாரச் செயல்திட்டங்களை வடிவமைத்தன. மேலும், சில நாடுகளில் வேலை என்பது குடிமக்களின் உரிமை என்று சட்டமாக்கப்பட்டது.

ஆனால், பொதுவாகவே நாம் வேலை என்று சொல்லும்போது, அடுத்தவருக்காக சம்பளம்/கூலி பெற்றுக்கொண்டு உழைப்பதையே குறிக்கிறோம். ஊதியம் பெற்றுக்கொண்டு வேலை செய்வதென்பது ஒருவருடைய கடமையாகிறது; அது உரிமையாக இருக்க முடியாது என்று சொல்பவர்களும் உண்டு.

ஒருவருக்கு வழங்கப்படும் உரிமைகள், அவருடைய சுதந்திரங்களை அதிகரிக்க வேண்டும். வேலை செய்வதற்கான உரிமை, ஒருவருடைய தனித்திறமை, ஆக்கத்திறன், செயல்திறன் மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்குவதாக இருக்க வேண்டும். அடுத்தவருக்காக மட்டுமே வேலை செய்தால் இது சாத்தியமாகுமா? நிலம் வைத்திருப்பவரிடம் விவசாயக் கூலியாகவோ, பண்ணையடிமையாகவோ வேலை செய்தால், சுயமரியாதை என்பதற்கே இடமில்லாமல் போகிறது. பெருநிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும் சுயமரியாதையைக் கட்டிக்காத்துக் கொண்டுதான் வேலை செய்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. இந்த நிலையில், வேலை என்பது எப்படி ஒருவருடைய சுதந்திரத்தை, தனித்திறமையை வளர்த்தெடுக்கும் உரிமையாக இருக்க முடியும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

ஒருவர் தான் விரும்பும் வேலையைச் செய்யும்போது மட்டுமே அவர் சுதந்திரமாகச் செயல்பட முடியும்; அதிலிருந்துதான் சுயமரியாதையும் பிறக்கும். செய்துகொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு, பிடித்த வேலையைச் செய்ய நினைக்கும்போது, அது போதிய வருமானம் ஈட்டக்கூடிய வேலையாக இருக்குமா எனும் கவலை எழாமல் இருக்க வேண்டும் என்றால், அனைவருக்கும் அடிப்படை வருமானம் ஒன்றை உறுதி செய்வதால் மட்டுமே அது சாத்தியமாகும் எனும் கருத்து நிச்சயமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 2

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 3

திங்கள், 6 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon