மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

அனைவருக்குமான அடிப்படை வருமானம்- 3

அனைவருக்குமான அடிப்படை வருமானம்- 3

ஒரு சமூகத்தின் சொத்து என்பது அதில் வாழும் அனைவரின் பங்களிப்பாலும் உருவாக்கப்படும் ஒன்று. முந்தையத் தலைமுறையினர் உருவாக்கித் தரும் வளங்களை வைத்துத்தான் அடுத்த தலைமுறையினர் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் மேலும், ஒருவர் வேலை ஏதும் செய்யாமல் வீட்டில் இருந்தாலும், அவர் பொருட்களை நுகர்பவராகவே இருக்கிறார். தேவையும், கிராக்கியும், நுகர்வும் இருந்தால்தான் உற்பத்தி என்பது நடைபெறும்; பொருளாதார இயந்திரம் தொடர்ந்து இயங்கும்.

வீட்டுவேலை செய்யும் பெண்கள், தேச மொத்த உற்பத்தியைப் பெருக்க உதவுவது இல்லை என்று, அவர்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் வீட்டுவேலையைப் பல நாடுகள் ‘வேலை’ என்றே கணக்கில் கொள்வதில்லை. ஆனால், அவர்களின் கவனிப்பால்தான் ஆரோக்கியமான, உற்பத்தித்திறன் மிக்க நபர்கள் நாட்டில் உருவாகிறார்கள். பெண்களின் இந்தப் பொருளாதாரப் பங்களிப்பிற்கு சம்பளம் கொடுக்க ஆரம்பித்தால் முதலாளித்துவத்தால் தாக்குப்பிடிக்கவே முடியாது என்று பல பெண்ணிய அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலம் எனும் இயற்கை வளம் அனைவருக்கும் பொதுவான சொத்து. ஆனால், வேலி போட்டும், பட்டா போட்டும் நிலத்தைத் தனிநபர் சொத்தாக்கியிருக்கிறோம். நிலத்திற்கு சொந்தமானவர், நிலத்தில் வேலை செய்பவர்கள் என வகைப்படுத்தி, நிலத்தைப் பயன்படுத்துபவர்களிடம் வாடகை வாங்குகிறோம். இதைப் பல நூற்றாண்டுகளாகவே செய்து வருகிறோம். அனைவருக்கும் பொதுவான ஒரு சொத்தைத் தனிநபர்கள் தங்களுடைய சொத்தாக்கிக் கொள்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று நாம் நினைப்பதில்லையே!

ஒருவனுக்கு/ஒருத்திக்கு மீன் தருவதைவிட, மீன் பிடிக்கக் கற்றுத் தருவதே சிறந்தது; அதுவே அந்நபரின் வாழ்விற்கும் வாழ்வாதாரத்திற்கும் நிரந்தரமான உதவியாக இருக்கும் என்று சீனப்பழமொழி ஒன்று உண்டு. ஏழைகளுக்கு மானியங்களும் இலவசங்களும் அரசு வழங்கினால், ‘அவர்களுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள்’ எனும் குரல்கள் எழுகின்றன.

இன்று கல்வி, வேலை செய்வதற்கான திறன் இரண்டையும் வழங்கினாலும் அதைவைத்துப் பிழைப்பது பெருஞ்சவாலாக இருக்கிறது. பலர் மீன்பிடிக்கக் கற்றுக்கொண்டு விட்டனர்; ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மீன்களைப்பிடிக்க இத்தனைபேர் தேவையில்லை எனும் நிலையில் நாம் இருக்கிறோம். வேலையின்மைப் பிரச்சனை உலகின் வளர்ந்த நாடுகளிலும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

மூலதனம் வைத்திருப்பவர்களே பொருளாதாரத்தில் அதிகம் மதிப்பு கூட்டுபவர்களாகக் கருதப்படுகின்றனர். அதற்குப் பின்னால் கோடிக்கணக்கான மக்களின் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத உழைப்பும் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்தால், அதுவே அனைவருக்குமான அடிப்படை வருமானம் பற்றிய ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கான ஆரம்பப்புள்ளியாக இருக்கும்.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

அனைவருக்குமான அடிப்படை வருமானம்- 2

ஞாயிறு, 5 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon