மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 மே 2019

மொழியில் இருக்க வேண்டிய நெகிழ்வு!

மொழியில் இருக்க வேண்டிய நெகிழ்வு!

ஒரு சொல் கேளீரோ! – 2: அரவிந்தன்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் மொழியில் இலக்கணத்தை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டுமா?

அவசியம் இல்லை. இலக்கணத்தின் சில விதிகளை அப்படியே கடைப்பிடித்தால் எளிய வாசிப்புக்கு அது சற்றே இடையூறாக இருக்கலாம். குறிப்பாக, வெகுமக்கள் வாசிப்பில் அது இடறல்களை ஏற்படுத்தலாம். எனவே, நடைமுறை சார்ந்த நெகிழ்ச்சி தேவை. உதாரணம் பாருங்கள்:

அவர்தான் ஆசிரியர்

அவர்கள்தாம் அணியின் உறுப்பினர்கள்

ஒருமைக்குத் (அவர்) தான் என்று போடுவதுபோல, பன்மைக்குத் (அவர்கள்) தாம் என்று போட வேண்டும். ஆனால், அவர்கள்தாம் என்பது நடைமுறை வழக்கில் அவ்வளவாக இல்லை. புலமை வழக்கில் உள்ளது. வெகுஜன ஊடகங்களில் ‘அவர்கள்தாம்’ என்று எழுதினால் சாதாரண வாசகரை அது அந்நியப்படுத்திவிடலாம். எனவே, பெரும்பாலான ஊடகங்கள் எளிமை கருதி அவர்கள்தான் என்றே எழுதுகின்றன.

அதேபோல, உயிரெழுத்தில் தொடங்கும் பெயர்ச்சொற்களுக்கு முன்னால் ஒரு என்று வரக் கூடாது, ஓர் என்று எழுத வேண்டும் என்று பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அப்படியேதும் விதி கிடையாது; ஒரு ஓர் ஆகியவற்றை ஆங்கிலத்தில் a, an என்பதைப் போலக் கருதியதால் வந்த வினை இது. எனினும் உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஓர் என எழுதும் பழக்கம் பரவலாக உள்ளது.

ஓர் ஆண்டு, ஓர் இடம், ஓர் உண்மை…

இப்படி எழுதினால் அது சற்றே இறுக்கமான நடையாக மாறிவிடுகிறது. ஒரு ஆண்டு, ஒரு இடம், ஒரு உண்மை என எழுதினால் இறுக்கம் சற்றுத் தளர்கிறது. இதனால் பொருள் குழப்பமும் வருவதில்லை. மக்கள் பேச்சு வழக்கில் “ஒரு இடம் கிடைக்குமா?”, “ஒரு உண்மை சொல்லட்டுமா?” என்று பேசுவதே இயல்பாக இருக்கிறது.

வெகுஜன வாசகர்களுக்கான ஊடகத்தைப் பொறுத்தவரை எளிமைதான் முக்கியம். எனவே நெகிழ்வான முறையில் ஒரு ஆண்டு, ஒரு இடம் என்றே எழுதலாம்.

அப்படியே ஓர் பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் ஓராண்டு, ஓரிடம், ஈராயிரம் எனச் சேர்த்து எழுதுவதே பொருத்தமானது.

ஓராறு முகமும் ஈராறு கரமும், ஓராயிரம் பார்வையிலே ஆகிய பாடல்களில் இது பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஓர் என்பது எப்படி இயல்பாக உள்வாங்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஓர் என்பதைத் தவிர்த்தால் இலக்கணப் பிழையோ, மொழிச் சிதைவோ ஏற்பட்டுவிடுமோ என அஞ்ச வேண்டியதில்லை. அதைத் தவிர்த்தால் பொருள் குழப்பம் ஏற்படுமோ என்றும் கவலைப்பட வேண்டியதில்லை. எனவே ஓர் என்பதைக் கூடியவரை தவிர்க்கலாம்.

ஆனால், ஒரு சில விதிகளை அப்படி அலட்சியப்படுத்திவிட முடியாது. அப்படிச் செய்வது பிழையானது. அது பொருள் குழப்பத்தை ஏற்படுத்தும். மொழியையும் சிதைக்கும்.

அப்படிப்பட்ட விதிகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் புதனன்று வெளியாகும்.)

தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்

ஞாயிறு, 5 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon