மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

அனைவருக்குமான அடிப்படை வருமானம்- 2

அனைவருக்குமான அடிப்படை வருமானம்- 2

இலவசங்கள், மானியங்கள், கொஞ்சம் அதிகமான கூலி என ஏழைகளுக்கு ஏதேனும் அரசு வழங்கத் திட்டமிடும்போதே, ‘இவையெல்லாம் மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிடும். எவரும் வேலைக்கு வரமாட்டார்கள்’ என்று சமுதாயத்தின்மீது பெரும் அக்கறை கொண்டவர்கள்போல் சிலர் பேசத் தொடங்கிவிடுவார்கள். மையநீரோட்டப் பொருளாதார வல்லுநர்கள் படம் எல்லாம் வரைந்து காட்டி, பொருளியல் கோட்பாடுகளையெல்லாம் விளக்கிக்கூறி அப்படியொரு நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்பர்.

‘மனிதனின் ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் அளவே கிடையாது’ என்பது பொருளியலில் பாலபாடம், இதுவே நிதர்சனமும்கூட. பெருமுதலாளிகள், செல்வந்தர்கள் மேலும் பணம் சம்பாதிக்க, சொத்துக்கள் குவிக்க எடுக்கும் நடவடிக்கைகளை ‘பேராசை பொருளாதாரத்திற்கு நல்லது’ (greed is good) என்றும், ஏழைகள் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தோடு வாழ்வதற்கு அரசு ஏதாவது செய்தால் அதை “வீண் செலவு”, “பொறுப்பற்ற நிதிக்கொள்கை” என்றும் தரக்குறைவாகப் பேசுவதில் என்ன அறம் உள்ளது?

முதலாளிகளுக்கு சொத்துரிமை (property rights) வழங்கினால்தான் அந்த சொத்தைப் பயன்படுத்தி உற்பத்தி மேற்கொள்ள அவர்களுக்கு ஊக்கம் இருக்கும் என்பார்கள் மையநீரோட்டப் பொருளாதார வல்லுநர்கள். ஆனால், உழைப்பாளி மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், நிரந்தர வேலை வழங்கினால், அவர்களுக்கு வேலை செய்யும் ஊக்கம் போய்விடுமாம். எளியவர்களின் உழைப்பைச் சுரண்டுவதோடு நில்லாமல், “என் உழைப்பால்தான் இவ்வளவும் சம்பாதித்தேன். அதை நான் ஏன் வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும்?” என்று தான் சொல்வதில் உள்ள முரணை உணராமல் வியாக்கியானம் பேசுபவர்களைக் கொண்டாடும் முதலாளித்துவம், மனிதநேயத்தோடு இயங்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா?

முதலாளித்துவத்தை மனிதநேயத்தோடு செயல்பட வைக்க முடியும் எனும் வாதமும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்வீடன், நார்வே, பின்லாந்து முதலிய நாடுகளில் இருக்கும் முதலாளித்துவம், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து பின்பற்றும் முதலாளித்துவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது; பல காலமாகவே அந்நாடுகளில் செல்வந்தர்களிடமிருந்து அரசு அதிக வரி வசூலித்து பெரும்பான்மை மக்களுக்கு சாதகமாக வளங்களை மறுபகிர்வு செய்து வந்துள்ளதால்தான் அங்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன எனும் வாதத்தில் உண்மை இருக்கிறது.

உலகமயமாக்கலும், கட்டுப்படுத்த முடியாத தொழில்நுட்ப மாற்றங்களும் உற்பத்தி உறவுகளை மாற்றிக்கொண்டிருக்கின்றன. இயந்திரங்கள், ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு முதலியவை மனித உழைப்பைத் தேவையற்ற ஒன்றாக ஆக்கிவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால், மனிதர்களிடமிருந்து பொருட்களுக்கான கிராக்கி இருந்தால் மட்டும்தான் முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்ட முதலாளித்துவமும் இயங்க முடியும். அதனால்தான் எலான் மஸ்க், பில் கேட்ஸ், சக்கர்பெர்க் போன்றவர்களும் பதறியடித்துக் கொண்டு அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை ஆதரிக்கின்றனர். சந்தர்ப்பவாதமும், சுயநலமும் இவர்களை மனிதகுலத்தின் நலன்விரும்பிகள்போல் பேசவைக்கின்றன. அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை வழங்குவதற்கு இதைவிடச் சிறந்த, மேன்மையான காரணங்கள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - பகுதி 1

சனி, 4 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon